தாமதமாகும் ஊதியத்தை தொகுதிகளாகப் பிரித்து வழங்கத் திட்டமிட்டிருக்கும் Dunzo
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் மளிகை மற்றும் உணவுப் பொருட்களின் விரைவு விநியோகச் சேவையை வழங்கி வரும், பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டன்சோ (Dunzo) நிறுவனம் கடந்த ஜூன் மாதம் முதல் தங்களுடைய ஊழியர்களுக்கான சம்பளத்தை அளிக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறது.
நிதிப் பற்றாக்குறை காரணமாக ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவதில் தாமதமாக்கி வரும் டன்சோ, கடந்த ஆகஸ்ட் மாதம், தங்களுடைய முதலீட்டாளர்களிடமிருந்து 'சீரிஸ் G' நிதிச் சுற்று மூலம் 80 முதல் 100 மில்லியன் டாலர்கள் வரையிலான முதலீட்டைத் திரட்ட முயற்சி செய்து வருகிறது.
இந்த சமீபத்திய நிதிச் சுற்று மூலம், பெரும் பகுதி நிதியை ஈக்விட்டி ஃபண்டிங் மூலமாகவும், சிறியளவு கடனாகப் பெறவும் முயற்சி செய்து வருகிறது டன்சோ.
வணிகம்
ஊழியர்களுக்கு ஊதியம் எப்போது வழங்கவிருக்கிறது டன்சோ?
டன்சோவின் நிதி திரட்டும் முயற்சி தோல்வியில் முடிந்திருப்பதாகவும், அதனால் ஊழியர்களுக்கான சம்பளத்தை அக்டோபரில் அந்நிறுவனம் வழங்கலாம் எனவும் தகவல்கள் வெளியானது.
ஆனால், முன்னதாக ஊழியர்களுக்கு டன்சோ அனுப்பியிருந்த கடிதமொன்றில், செப்டம்பர் 4ல் ஊதியம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்திருக்கிறது.
இந்நிலையில், இன்று முதல் தொகுதிகளாகப் பிரித்து ஊதியத்தை வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அனைவருக்கும் ஊதியம் வந்து சேர சில நாட்கள் ஆகலாம் எனவும் புதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
மேலும், ஆகஸ்ட் மாதத்திற்கான ஊதியத்தை ஒரு வாரத்திற்குள் வழங்கிவிடுவதாகவும் அந்தக் கடிதத்தில் உறுதியளித்திருக்கிறது டன்சோ. மேலும், தாங்கள் நிலுவையில் வைத்திருக்கு ஊதியத் தொகைக்கு, ஆண்டுக்கு 12% வீதம் வட்டி வழங்கி விடுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்து.