செபி விதிமுறைகளை எளிமையாக்க புதிய மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம்: பங்குச் சந்தையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன?
செய்தி முன்னோட்டம்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய பங்குச் சந்தைக்கான விதிமுறைகளை எளிமையாக்கவும், முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த மசோதாவின் மிக முக்கியமான அம்சம், தற்போது நடைமுறையில் உள்ள மூன்று முக்கிய சட்டங்களை ஒரே சட்டத் தொகுப்பாக (Single Code) மாற்றுவது ஆகும். அவை செபி சட்டம், 1992 (SEBI Act), பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 1956 (SCRA), டெபாசிட்டரிகள் சட்டம், 1996 (Depositories Act) ஆகும். இதன் மூலம், பங்குச் சந்தை தொடர்பான பல்வேறு குழப்பங்கள் நீங்கி, விதிமுறைகள் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்படும்.
செபி
செபி (SEBI) மற்றும் பங்குச் சந்தை அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள்
அதிகாரப் பகிர்வு: செபி அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவருக்கான பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. பதவிக்குப் பிந்தையக் கட்டுப்பாடுகள்: செபி தலைவர் அல்லது உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலகிய பிறகு, ஒரு வருடம் வரை மத்திய அல்லது மாநில அரசுப் பணிகளில் சேரக் கூடாது என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட நலன்களுக்காக முடிவுகள் எடுக்கப்படுவதைத் தடுக்க உதவும். வெளிப்படைத்தன்மை: செபி அதிகாரிகள் முடிவெடுக்கும் போது, அவர்களுக்கு அந்த விவகாரத்தில் ஏதேனும் நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு இருந்தால் அதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
நன்மைகள்
முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்
எளிமையான விதிமுறைகள்: பல சட்டங்கள் ஒன்றாக இணைக்கப்படுவதால், முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை விதிமுறைகளைப் புரிந்துகொள்வது எளிதாகும். மேம்பட்ட பாதுகாப்பு: மோசடிகளைத் தடுக்கவும், விரைவாக நடவடிக்கை எடுக்கவும் செபிக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக டிஜிட்டல் தளங்கள் மூலம் நடக்கும் முறைகேடுகளைக் கண்காணிக்க இது உதவும். குறைந்தச் செலவு: விதிமுறைகள் எளிமையாவதால், பங்குத் தரகர்கள் மற்றும் சந்தை அமைப்புகளுக்கான நிர்வாகச் செலவுகள் குறையும். இது மறைமுகமாக முதலீட்டாளர்களுக்கு லாபமாக அமையும். இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் சில ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டதால், இது விரிவான ஆய்விற்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.