டொனால்ட் டிரம்ப் படுகொலை முயற்சியைத் தொடர்ந்து டிரம்ப் தொடர்பான கிரிப்டோகரன்ஸிகளின் மதிப்பு உயர்ந்தது
பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பேரணியின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அந்த படுகொலை முயற்சியைத் தொடர்ந்து, டிரம்ப்-கருப்பொருள் கொண்ட முன்னணி கிரிப்டோகரன்ஸியான MAGA(TRUMP) காயினின் விலை 30% க்கும் அதிகமாக உயர்ந்தது. இன்று காலை ஆரம்பத்தில் $6.31க்கு வர்த்தகம் செய்யப்பட்ட MAGA சில நிமிடங்களில் $10.36 ஆக உயர்ந்தது. இது அதன் சந்தை மதிப்பு $293 மில்லியனில் இருந்து $469 மில்லியனாக உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, டிரம்ப் தொடர்பான பிற மீம்காயின்களும் குறிப்பிடத்தக்க லாபங்களைக் கண்டன. சோலனாவை அடிப்படையாகக் கொண்ட ட்ரெம்ப் (TREMP) ஒரு மணி நேரத்திற்குள் 63% உயர்ந்தது. அதே நேரத்தில் MAGA Hat(MAGA) 21% அதிகரித்தது.
உலகம் முழுவதும் உள்ள வர்த்தகங்களில் டிரம்பின் தாக்கம்
கடந்தகாலத்தில் கிரிப்டோகரன்ஸிகள் குறித்து டிரம்ப் சந்தேகங்களை தெரிவித்திருந்த போதிலும், அவரது சமீபத்திய ஆதரவு அறிக்கைகள் சந்தை இயக்கவியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சீன மொழியில் "ட்ரம்ப் வின்ஸ் பிக்" உடன் ஒலிப்புரீதியாக தொடர்புடைய ஒரு சீன நிறுவனத்தின் பங்குகளிலும் டிரம்பின் தாக்கம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, ஆசியாவில், தென் கொரியாவில் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி பங்குகளும் அதிகரித்துள்ளன. இந்த துறைகளுக்கு பயனளிக்கும் டிரம்ப் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளதால் சந்தையில் இந்த மாற்றம் தெரிந்தது. இன்று பிட்காயினும் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவு அதிகபட்சமாக உயர்ந்தது.