வருமான வரி செலுத்துபவர்களுக்கு வருமான வரித்துறை வெளியிட்ட AIS செயலியைப் பற்றித் தெரியுமா?
கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் வரி செலுத்துபவர்களுக்காக 'AIS for Taxpayers' என்ற ஸ்மார்ட்போன் செயலியை அறிமுகப்படுத்தியது வருமான வரித்துறை. பெயரில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போலவே இந்த செயலியில் வரி செலுத்தும் நபர்கள், தங்களுடைய 'வருடாந்திர தகவல் அறிக்கை' (AIS) மற்றும் வரிசெலுத்துபவர் தகவல் சுருக்கம் (TIS) ஆகிய தகவல்களை சரிபார்த்துக் கொள்ள முடியும். வருமான வரி வலைத்தளப் பக்கத்தில் இருக்கும் மேற்கூறிய AIS மற்றும் TIS தகவல்களை ஸ்மார்ட்போனில் எளிதாக அணுகுவதற்காக இந்தப் புதிய செயலியை அறிமுகம் செய்தது வருமான வரித்துறை. மேலும், வருமான வரி வலைத்தளத்தில் காட்டப்படும் அனைத்து AIS மற்றும் TIS தகவல்களும் இந்த செயலியில் காட்டப்படமாட்டாது. மாறாக, அதன் சுருக்கத்தை மட்டும இதில் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்.
AIS செயலி, எப்படிப் பயன்படுத்துவது?
AIS செயலியில், TDS/TCS, வட்டி, டிவிடெண்ட், பங்குப் பரிவர்த்தனைகள், வரிக் கட்டணங்கள், வருமான வரியில் இருந்து திரும்பப் பெற்ற பணம் மற்றும் இதர தகவல்களை சுருக்கமாக நாம் தெரிந்து கொள்ள முடியும். மேலும், AIS குறித்த தகவல்களுக்கு வலைத்தளத்தில் பின்னூட்டம் அளிப்பதைப் போல செயலியிலும் பின்னூட்டம் அளிக்க முடியும். பிளே ஸ்டோரில் AIS for Taxpayer என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர், நம்முடைய பான் எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் கொண்டு பதிவு செய்து இந்தச் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கலாம். இந்த செயலியில் நேரடியாக வருமான வரித் தாக்கல் செய்யவோ அல்லது AIS தகவல்களில் மாற்றம் செய்யவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.