கூகுள் நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் ரூ.30 லட்சம் அபராதம்: ஹிந்த்வேர் வர்த்தக முத்திரை வழக்கில் அதிரடி உத்தரவு!
செய்தி முன்னோட்டம்
பிரபல சானிட்டரிவேர் நிறுவனமான ஹிந்த்வேரின் வர்த்தக முத்திரை உரிமைகளை மீறியதற்காகக் கூகுள் நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. ஹிந்த்வேர் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட "HINDWARE" என்ற பெயரை கூகுள் அட்ஸ் தளம் மூலம் பிற போட்டி நிறுவனங்கள் ஏலம் எடுக்க அனுமதித்ததே இதற்குக் காரணமாகும். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மினி புஷ்கர்ணா, "HINDWARE" என்ற பெயரை விளம்பரக் கீவேர்டுகளாகப் பயன்படுத்தக் கூகுள் நிறுவனத்திற்குத் தற்பொழுது நிரந்தரத் தடை விதித்துள்ளார். மேலும், வர்த்தக முத்திரையை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காகப் பாதிக்கப்பட்ட ஹிந்த்வேர் நிறுவனத்திற்குக் கூகுள் தரப்பு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விளம்பர முறைகேட்டின் பின்னணி
கண்ணுக்குத் தெரியாத கீவேர்டு விளம்பரங்கள் மூலம் போட்டி நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களைத் திசைதிருப்பிய கூகுள்
இணையத்தில் நுகர்வோர் "HINDWARE" தயாரிப்புகளைத் தேடும்போது, அவர்களுக்கு ஹிந்த்வேர் பக்கத்திற்குப் பதிலாக குரோஹே மற்றும் செரா போன்ற போட்டி நிறுவனங்களின் விளம்பரங்கள் முதலில் தோன்றுமாறு கூகுள் அட்ஸ் வடிவவமைக்கப்பட்டிருந்தது. இவை வெறும் கண்ணுக்குத் தெரியாத பின்னணித் தூண்டுகோல்கள் மட்டுமே என்பதால் வர்த்தக முத்திரைச் சட்ட விதிகளின் கீழ் வராது என்ற கூகுளின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஒரு விளம்பரத்தில் வர்த்தக முத்திரை நேரடியாகத் தெரியாவிட்டாலும், அதனைத் தேடல் சொல்லாகப் பயன்படுத்தி இணையப் போக்குவரத்தைத் திசைதிருப்புவது வர்த்தக முத்திரைச் சட்டப்படி அப்பட்டமான விதிமீறலாகும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
கூகுள் மீதான நீதிமன்றக் கண்டனம்
நிறுவனங்களின் நற்பெயரை ஏலம் விட்டு வணிக லாபம் ஈட்டியதாகக் கூகுள் மீதான பாதுகாப்பை மறுத்த நீதிமன்றம்
"HINDWARE" என்பது அகராதிப் பொருள் இல்லாத ஒரு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட முத்திரையாகும் என்பதால், அதனைத் தேடும் நுகர்வோர் ஹிந்த்வேர் தயாரிப்புகளை மட்டுமே தேடுகிறார்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு தனித்துவமான பிராண்டின் நற்பெயரைப் போட்டி நிறுவனங்களுக்கு ஏலத்தின் மூலம் விற்று, ஒவ்வொரு கிளிக்கிற்கும் கூகுள் நிறுவனம் தவறான லாபம் ஈட்டியுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இடைத்தரகர்களுக்கான சட்டப் பாதுகாப்பைக் கோரி தப்பிக்க முயன்ற கூகுளின் வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஏனெனில் கூகுள் ஒரு நடுநிலையான தளம் அல்ல என்றும், அதுவே விளம்பரங்களை வரிசைப்படுத்தி, பிறர் சொத்து மூலம் வருவாய் ஈட்டுவதால் அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.