
ரூ.2000 நோட்டுகள் - வங்கிகளில் செலுத்துவதற்கான அவகாசம் நாளையோடு நிறைவு
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்த 2000 நோட்டுகளை திரும்ப பெற போவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஓர் அறிக்கையினை வெளியிட்டது.
அதனை தொடர்ந்து கடந்த மே மாதம் 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை பொதுமக்கள் இந்த ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
அதன்படி இதற்கான அவகாசம் நாளையோடு முடிகிறது.
அதன் பின்னர் எந்தவொரு வங்கியிலும் 2000 நோட்டுகளை மாற்றவோ, டெபாசிட் செய்யவோ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாளை(செப்.,30) வங்கிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் இன்று(செப்.,29) மட்டுமே மக்களால் நோட்டுகளை மாற்ற முடியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வங்கி
ஆம்னி பேருந்துகளிலும் ரூ.2,000 நோட்டுக்கள் வாங்கப்படாது
இந்நிலையில், பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து இன்று முதல் 2,000 நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது என்னும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
அதே போல், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதனை டெலிவரி செய்யும் ஸ்விகி, சோமேட்டோ போன்ற நிறுவனங்களும் ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டினை வாங்க மறுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இவர்களை தொடர்ந்து, இன்று முதல் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பெட்ரோல் பங்க்கில் வாங்க மாட்டோம் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே ஆம்னி பேருந்துகளிலும் 2000 நோட்டுகளை பயணிகளிடம் இருந்து வாங்க மாட்டோம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.