$100-ஐத் தாண்டிய கச்சா எண்ணெய் விலை! பெட்ரோல், டீசல் விலை இனி என்னவாகும்?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து, ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடல்வழித் தடை சர்வதேசச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களை அமெரிக்க கடற்படை முடக்கும் என்ற அறிவிப்பால், கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் தடையறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கக் கச்சா எண்ணெய்(WTI) விலை 8% உயர்ந்து ஒரு பேரல் 104.24 டாலராக விற்பனையாகிறது. அதேபோல், சர்வதேச அளவுகோலான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 7% உயர்ந்து ஒரு பேரல் 102.29 டாலரை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கியபோது 70 டாலராக இருந்த எண்ணெய் விலை, தற்போது மீண்டும் 100 டாலரை கடந்துள்ளது.
எச்சரிக்கை
ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பும் செண்ட்காம் எச்சரிக்கையும்
இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், "ஹார்முஸ் நீரிணைக்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்கக் கடற்படை உடனடியாக முடக்கும்" என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM) இது குறித்துக் கூறுகையில், ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் எந்த நாட்டு படகாக இருந்தாலும் பாகுபாடின்றித் தடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இருப்பினும், ஈரான் அல்லாத மற்ற துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் நீரிணை வழியாகச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஈரான்
ஹார்முஸ் நீரிணையின் முக்கியத்துவமும் ஈரானின் பதிலடியும்
உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20-25% பங்கு ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. சவுதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் போன்ற நாடுகள் தங்களின் ஏற்றுமதிக்கு இந்த வழித்தடத்தையே நம்பியுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா ஏதேனும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால், அது அவர்களுக்கு ஒரு "மரணச் சுழலாக" (Deadly whirlpools) அமையும் என்றும், அமெரிக்கப் படைகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
தாக்கம்
உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம்
பிப்ரவரி 28 முதல் ஈரானின் கட்டுப்பாட்டில் இருந்த ஹார்முஸ் நீரிணையை தற்போது அமெரிக்கா முடக்க முயல்வது, சர்வதேச எரிசக்தி விநியோகச் சங்கிலியில் மிகப்பெரிய முறிவை ஏற்படுத்தும். ஏற்கனவே ஈரான் -இஸ்ரேல் மோதலால் உலகச் சந்தை தள்ளாடி வரும் நிலையில், இந்தத் தடை உத்தரவு பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயர்த்தக்கூடும். ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து, இரு நாடுகளும் ராணுவ ரீதியிலான மோதலை நோக்கித் நகர்வது சர்வதேச சமூகத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.