LOADING...
கனடா டொராண்டோ திருவிழாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி, 6 பேர் காயம், கொலையாளி தலைமறைவு
கனடா டொராண்டோ திருவிழாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு

கனடா டொராண்டோ திருவிழாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி, 6 பேர் காயம், கொலையாளி தலைமறைவு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 12, 2026
10:56 am

செய்தி முன்னோட்டம்

கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற சல்சா ஆன் செயின்ட் கிளேர் வீதித் திருவிழாவில் நடந்த பயங்கரத் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் படுகாயமடைந்துள்ளனர். திருவிழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், திடீரென புகுந்த மர்ம நபர் நடத்திய இந்த கண்மூடித்தனமான தாக்குதல் ஒட்டுமொத்த கனடா நாட்டையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

போலீஸ் தீவிரத் தேடுதல்

மக்கள் கூட்டத்தில் புகுந்த கொலையாளி

டொராண்டோவின் செயின்ட் கிளேர் அவென்யூ வெஸ்ட் மற்றும் ஆர்லிங்டன் அவென்யூ சந்திப்பு பகுதிக்கு அருகே உள்ளூர் நேரப்படி இரவு 8:12 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், ரத்த வெள்ளத்தில் கிடந்த 6 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அல்லது நபர்கள் தப்பியோடி தலைமறைவாக உள்ளதால், அப்பகுதியில் டொராண்டோ போலீஸார் தீவிரத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். குற்றவாளி இன்னும் பிடிபடாததால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அறிவற்ற வன்முறை

ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு இரங்கல்

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சல்சா திருவிழாவில் இரண்டு உயிர்களைப் பலிவாங்கிய இந்த அறிவற்ற வன்முறை செயலால் நான் ஆழ்ந்த மனவேதனை அடைந்துள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் விபரங்களையோ அல்லது தாக்குதலுக்கான காரணத்தையோ போலீஸார் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

Advertisement

வன்முறை

பாதுகாப்பான நகரத்தில் அரங்கேறிய அரிதான வன்முறை சம்பவம்

லத்தீன் அமெரிக்க பாரம்பரிய இசை, நடனம் மற்றும் உணவுத் திருவிழாவான இந்த சல்சா திருவிழா நடப்பு 2026-ஆம் ஆண்டில் தனது 22வது பதிப்பைக் கொண்டாடி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் திரளும் இந்த பிரம்மாண்ட திருவிழா வீதியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வட அமெரிக்காவின் மிக பாதுகாப்பான பெருநகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் டொராண்டோவில், இது போன்ற பொது இடங்களில் அரங்கேறும் கூட்டுத் துப்பாக்கிச்சூடு வன்முறைச் சம்பவங்கள் மிகவும் அரிதானவை என்பதால், இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement