ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கப் போவதாக அமெரிக்கா அறிவிப்பு; ஈரானிற்கு மீண்டும் இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்தது. இதன் விளைவாக, உலகளாவிய எரிசக்தி போக்குவரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களையும் முடக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பேச்சுவார்த்தை முறிந்த சில மணி நேரங்களிலேயே இந்த அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளார். சர்வதேச வர்த்தகத்தில் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் இந்தப் பாதை வழியாகவே செல்வதால், டிரம்பின் இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான எச்சரிக்கை
யாரும் தப்பிக்க முடியாது என கடும் எச்சரிக்கை
தனது சமூக வலைதளப் பதிவில் ட்ரம்ப் குறிப்பிடுகையில், "ஒரு கட்டத்தில் அனைத்துக் கப்பல்களும் தடையின்றிச் செல்ல அனுமதிக்கப்படும் சூழல் வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஈரான் அதற்கு இடம் கொடுக்கவில்லை" என்று சாடினார். மேலும், ஈரானுக்குச் சட்டவிரோதமாக நுழைவு வரி செலுத்தும் எந்தவொரு கப்பலையும் இடைமறித்துச் சோதனையிட அமெரிக்கக் கடற்படைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். "ஈரானுக்கு வரி செலுத்தும் எவருக்கும் சர்வதேசக் கடற்பரப்பில் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது" என்று அவர் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
ராணுவம் தயார் நிலை
ராணுவம் தயார் நிலை: "பிளோன் டு ஹெல்" (Blown to Hell)
ஈரானின் எந்தவொரு ஆக்ரோஷமான நடவடிக்கைக்கும் அமெரிக்க ராணுவம் 'Locked and Loaded' நிலையில் (முழுத் தயார் நிலையில்) இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். "எங்கள் படைகள் மீதோ அல்லது அமைதியான முறையில் செல்லும் கப்பல்கள் மீதோ ஈரான் தாக்குதல் நடத்தினால், அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள் (Blown to Hell)" என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும், சர்வதேசக் கடல் பகுதியில் ஈரான் வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றவும் அமெரிக்கப் படைகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பாரசீக வளைகுடா பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
பேச்சுவார்த்தை தோல்வி
தோல்வியில் முடிந்த 20 மணிநேர மாரத்தான் பேச்சுவார்த்தை
பாகிஸ்தானில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமை தாங்கினார். சுமார் 21 மணிநேரம் நீடித்த இந்த விவாதங்கள் குறித்துப் பேசிய அவர், "நாங்கள் அதிபருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். ஆனால், அணுசக்தி விவகாரத்தில் ஈரான் பிடிவாதமாக இருந்ததால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை" என்றார். ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை நிறுத்தி, அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்ற உறுதியை அளிக்கத் தவறியதே இந்தப் பேச்சுவார்த்தை முறிய முக்கியக் காரணமாக அமைந்தது.
குற்றச்சாட்டு
அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டு
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு அமெரிக்காவே காரணம் என்று ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், "ஈரான் நல்லெண்ணத்துடனேயே பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. ஆனால், அமெரிக்கா எங்களது நம்பிக்கையைப் பெறத் தவறிவிட்டது. ஈரானின் தர்க்கத்தையும் கொள்கைகளையும் அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது, இனி எங்களை நம்புவதா வேண்டாமா என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த முரண்பாடு சர்வதேசப் பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய் விலையை விண்ணைத் தொடச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது.