LOADING...
தொடர்ந்து இரண்டாவது முறையாக விலை உயர்வு! வர்த்தக சிலிண்டர் விலை ரூ.31 வரை அதிகரிப்பு
வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு

தொடர்ந்து இரண்டாவது முறையாக விலை உயர்வு! வர்த்தக சிலிண்டர் விலை ரூ.31 வரை அதிகரிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 01, 2026
12:41 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் மார்ச் 2026 க்கான விலை மாற்றத்தை இன்று வெளியிட்டுள்ளன. இதன்படி, ஹோலி பண்டிகை நெருங்கும் வேளையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்ந்து இரண்டாவது மாதமாக மேற்கொள்ளப்பட்ட விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதமும் சிலிண்டர் விலை ரூ.50 வரை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை

சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களின் புதிய விலை விவரம்

சென்னையில் 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.29.50 உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு சிலிண்டர் ரூ.1,929 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் தலைநகர் டெல்லியில் ரூ.28 உயர்த்தப்பட்டு ரூ.1,768.50 க்கும், மும்பையில் ரூ.28.50 உயர்த்தப்பட்டு ரூ.1,720.50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் தான் இந்த முறை அதிகபட்சமாக ரூ.31 உயர்த்தப்பட்டுள்ளது. அங்கு ஒரு சிலிண்டரின் விலை ரூ.1,875.50 ஆக உள்ளது. இந்த விலை உயர்வால் உணவகங்கள், தேநீர் கடைகள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வீட்டு உபயோகம்

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் நிலைத்தன்மை

வணிக ரீதியான சிலிண்டர்களின் விலை உயர்ந்தாலும், சாமானிய மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 உயர்த்தப்பட்ட பிறகு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக விலையில் மாற்றம் ஏதுமின்றி அதே நிலையில் நீடிக்கிறது. இதன்படி சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.868.50 ஆகவே இப்போதும் தொடர்கிறது. பிற நகரங்களான டெல்லியில் ரூ.853 க்கும், கொல்கத்தாவில் ரூ.879 க்கும், மும்பையில் ரூ.852.50-க்கும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

Advertisement