ஆண்டின் முதல் நாளன்றே வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 110 உயர்வு
செய்தி முன்னோட்டம்
2026-ம் ஆண்டின் முதல் நாளான இன்று, வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறுதொழில் புரிவோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நிய செலாவணி மதிப்பைக் கணக்கில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில், இன்று முதல் வணிக பயன்பாட்டு சிலிண்டர் (19 கிலோ ஒன்றின் விலை ரூ. 110 உயர்ந்துள்ளது. இந்த உயர்விற்குப் பின் ஒரு வணிக சிலிண்டரின் விலை ரூ. 1,849.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (நேற்று வரை இது ரூ. 1,739.50 ஆக இருந்தது).
சிலிண்டர்
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
இல்லத்தரசிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் அதன் விலை மாற்றமின்றி ரூ. 868.50 என்ற நிலையிலேயே நீடிக்கிறது. புத்தாண்டு தொடக்கத்திலேயே வணிக சிலிண்டர் விலை நூறு ரூபாய்க்கு மேல் உயர்ந்திருப்பதால், ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சிலிண்டர் விலை ரூ. 10 குறைந்திருந்த நிலையில், தற்போது ஒரேடியாக ரூ. 110 உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.