20 ஆண்டுகளில் முதல்முறை: Nasdaq 100 குறியீட்டில் இருந்து காக்னிசண்ட் நீக்கம்
செய்தி முன்னோட்டம்
உலகளாவிய தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனமான காக்னிசண்ட், அமெரிக்கப் பங்குச்சந்தையின் முதன்மையான நாஸ்டாக் 100 குறியீட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் காக்னிசண்ட் நிறுவனம் இந்த முக்கியக் குறியீட்டில் இருந்து வெளியேற்றப்படுவது இதுவே முதல்முறையாகும். ஜூன் 22 முதல் இந்த மாற்றம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது. நாஸ்டாக் அமைப்பின் ஜூன் மாத காலாண்டு மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனம் பாரம்பரிய மென்பொருள் மற்றும் ஐடி சேவை நிறுவனங்களில் இருந்து, செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த சிப் தயாரிப்பு மற்றும் செமிகண்டக்டர் நிறுவனங்களை நோக்கி நகர்வதையே இந்த மாற்றம் காட்டுகிறது.
மாற்றம்
நிறுவனத்தின் செயல்பாட்டால் வந்த மாற்றம் அல்ல
நாஸ்டாக் 100 குறியீடு என்பது நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிதிச்சாரா துறைகளைச் சேர்ந்த 100 மிகப்பெரிய நிறுவனங்களின் செயல்பாட்டைக் கண்காணிப்பதாகும். இந்த மறுசீரமைப்பு என்பது காக்னிசண்ட் நிறுவனத்தின் தனிப்பட்ட வருவாய் அல்லது மோசமான செயல்பாட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று சந்தை வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். "இருப்பினும், இந்த மாற்றத்தின் காரணமாக நாஸ்டாக் 100 குறியீட்டைப் பின்பற்றி முதலீடு செய்யும் சர்வதேச இண்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் பசிவ் ஃபண்டுகள் தங்கள் வசம் உள்ள காக்னிசண்ட் பங்குகளைக் குறைத்துக் கொண்டு, புதிதாக இணைந்துள்ள ஏஐ பங்குகளின் முதலீட்டை அதிகரிக்கத் தொடங்கும்."
ஏஐ சவால்கள்
ஐடி சேவை நிறுவனங்களுக்கு ஏற்படும் ஏஐ சவால்கள்
சமீபத்தில் என்விடியா தலைமை நிர்வாகி ஜென்சன் ஹுவாங் பேசுகையில், ஏஐ தொழில்நுட்பத்தால் மென்பொருள் நிறுவனங்களின் எதிர்காலம் அழியாது என்று கூறியிருந்தார். எனினும், அக்ஸென்சர் போன்ற முன்னணி பாரம்பரிய ஐடி சேவை நிறுவனங்கள் ஏஐ வருகையால் சில பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும் எனப் பன்னாட்டுப் புரோக்கரேஜ் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இதன் தொடர்ச்சியாகவே காக்னிசண்டின் இலக்கு விலைகளும் குறைக்கப்பட்டன. வால் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்கள் தற்போது பாரம்பரிய ஐடி நிறுவனங்களை விட மைக்ரான் டெக்னாலஜி, ஏஎம்டி போன்ற ஏஐ சிப்மேக்கர்களுக்கே அதிக முன்னுரிமை மற்றும் மதிப்பீடுகளை வழங்குகிறார்கள் என்பதை இந்த வரலாற்றுப் பங்குச்சந்தை மறுசீரமைப்பு உணர்த்துகிறது.