AI ஒருங்கிணைப்புக்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கோகோ கோலா ஒப்பந்தம்
AI ஒருங்கிணைப்புக்காக மைக்ரோசாப்ட் உடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள கோகோ கோலா நிறுவனம் இதற்காக 1.1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இந்த ஒத்துழைப்பின் மூலம் பணியிட செயல்பாடுகளை மேம்படுத்துதல், செலவுகளை நிர்வகித்தல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரித்தல் ஆகியவற்றை கோகோ கோலா நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கோகோ கோலா நிறுவனம் அதன் அனைத்து பயன்பாடுகளையும் மைக்ரோசாப்டின் கிளவுட் அடிப்படையிலான தளமான Azure க்கு மாற்ற உள்ளது. AI இல் கோகோ கோலா செய்திருக்கும் முதலீடு, அதன் சந்தைப்படுத்தல் அணுகுமுறையை மறுசீரமைப்பதற்கும், உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி நிர்வாகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உதவும்.
ஏற்கனவே AIஐ ஏற்றுக்கொண்ட ரெட் புல் மற்றும் பெப்சிகோ
2020இல் கோகோ கோலா AIஇல் $250 மில்லியன் முதலீடு செய்தது. அதை விட அதிகமான ஒரு தொகையை தற்போது கோகோ கோலா AIஇல் முதலீடு செய்துள்ளது. ரெட் புல் மற்றும் பெப்சிகோ உள்ளிட்ட கோகோ கோலாவின் முக்கிய போட்டியாளர்கள் வாடிக்கையாளர் ஈடுபாட்டை மதிப்பிடுவதற்கு ஏற்கனவே AI ஐ ஏற்றுக்கொண்டுள்ளனர். மைக்ரோசாப்ட் உடனான விரிவாக்கப்பட்ட கூட்டணி குறித்து பேசிய கோகோ கோலாவின் மூத்த VP மற்றும் உலகளாவிய தலைமை தகவல் அதிகாரி நீரஜ் டோல்மர், "கோகோ கோலாவை டிஜிட்டல்-முதல் நிறுவனமாக மாற்றுவதற்கான பயணத்தில் ஒரு முக்கியமான அடுத்த அத்தியாயம்" என்று விவரித்தார்.