
ஓலா, உபருக்கு போட்டியாக வருகிறது மத்திய அரசின் 'சஹ்கார் டாக்ஸி'
செய்தி முன்னோட்டம்
ஓட்டுநர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கூட்டுறவு அடிப்படையிலான டாக்ஸி சேவையான 'சஹ்கார் டாக்ஸி'யை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
ஓலா மற்றும் உபர் போன்ற செயலி அடிப்படையிலான சேவைகளைப் பின்பற்றி இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம், கூட்டுறவு சங்கங்கள் இரு சக்கர வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுநர்களின் வருவாயிலிருந்து இடைத்தரகர்கள் பிடித்தம் இல்லாமல் பதிவு செய்ய அனுமதிக்கும்.
"சில மாதங்களில், ஒரு பெரிய கூட்டுறவு டாக்ஸி சேவை தொடங்கப்படும், இது ஓட்டுநர்களுக்கு நேரடி லாப ஓட்டத்தை உறுதி செய்யும்" என்று உள்துறை அமைச்சர் கூறினார்.
விவரங்கள்
கூட்டுறவு கூட்டமைப்பு கீழ் தொடங்கப்படவுள்ள டாக்ஸி சேவை
தேசிய சுற்றுலா மற்றும் போக்குவரத்து கூட்டுறவு கூட்டமைப்பு லிமிடெட் (NFTC), மூலமாக 'சஹகர் டாக்ஸி'-ஐ தொடங்கபடவுள்ளது.
இது லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NFTC தலைவர் வி.வி.பி. நாயர், "கூட்டுறவு உள்நாட்டு மாதிரியில் ஒரு போக்குவரத்து சேவையைத் தொடங்கப் போவதாகவும், இது வெளிநாட்டு போக்குவரத்து சேவை வழங்குநர்களுடன் ஒப்பிடும்போது மிகவும் மலிவான மற்றும் சலுகை விலையில் கிடைக்கும்" என்றும் கூறினார்.
மத்திய அரசின் ஆதரவுடன் தொடங்கப்படும் இந்தப் போக்குவரத்து சேவையின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் NFTC 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என்று அவர் கூறினார்.
மேலும் சுமார் 40 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைவார்கள் என்றும் கூறினார்.
என்ன காரணம்
பாரபட்ச விலை நிர்ணயம் இந்த நடவடிக்கையை தூண்டியது
பாரபட்சமான விலை நிர்ணயக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, முக்கிய டாக்ஸி தளங்களான ஓலா மற்றும் உபர் மீது அதிகரித்து வரும் புகார்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பயனர் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு சாதனம் வழியாக முன்பதிவு செய்வதை பொறுத்து பயணக் கட்டணங்கள் மாறுபடுகிறது என்று இணையத்தில் தகவல்கள் வெளிவந்ததை அடுத்து, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) சமீபத்தில் இரு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தளம் சார்ந்த விலை பாகுபாடு குறித்த கூற்றுக்களை ஓலா மறுத்தது.
உபர் நிறுவனமும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, பயணிகளின் தொலைபேசி மாதிரியைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுவதில்லை என்று கூறியது.