Loading...
சர்க்கரை விலை உயர்வைத் தடுக்க புதிய கட்டுப்பாடு! 15 நாட்களுக்கு மட்டுமே இருப்பு வைக்க மத்திய அரசு உத்தரவு
சர்க்கரையை 15 நாட்களுக்கு மட்டுமே இருப்பு வைக்க மத்திய அரசு உத்தரவு

சர்க்கரை விலை உயர்வைத் தடுக்க புதிய கட்டுப்பாடு! 15 நாட்களுக்கு மட்டுமே இருப்பு வைக்க மத்திய அரசு உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 20, 2026
01:15 pm

செய்தி முன்னோட்டம்

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் சர்க்கரை விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், சந்தையில் சர்க்கரை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் சர்க்கரை இருப்பு வைக்கும் வரம்பை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது. மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, மாதத்திற்கு 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான சர்க்கரையைப் பயன்படுத்தும் மொத்த நுகர்வோர்கள் மற்றும் வியாபாரிகள் இனி 15 நாட்களுக்குத் தேவையான சர்க்கரையை மட்டுமே இருப்பு வைக்க அனுமதிக்கப்படுவர். இந்த புதிய கட்டுப்பாடு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

யாருக்குக் கட்டுப்பாடு?

புதிய சர்க்கரை இருப்புக் கட்டுப்பாடுகள் யாரைக் கட்டுப்படுத்தும்?

கடந்த ஓராண்டில் சராசரியாக மாதத்திற்குப் பத்து மெட்ரிக் டன்னுக்கு மேல் சர்க்கரையைப் பயன்படுத்திய பெரிய அளவிலான மொத்த நுகர்வோர்கள் அனைவரும் இந்த புதிய உத்தரவின் கீழ் கொண்டு வரப்படுகின்றனர்.

இனிப்புப் பலகார தயாரிப்பாளர்கள், குளிர்பான நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் ஆலைகள், பிஸ்கட் தயாரிப்பாளர்கள் மற்றும் பிற பெரிய நிறுவனங்கள் இதில் அடங்குவர்.

இருப்பினும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் இயங்கும் நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த இருப்பு வரம்புக் கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேவை அதிகரிப்பு

பண்டிகைக் காலத் தேவையும் விலை உயர்வுக் காரணங்களும்

விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகைகள் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் வருவதால், இந்தியாவில் சர்க்கரைக்கான நுகர்வு மற்றும் தேவை வழக்கமாக அதிகரிக்கும்.

கடந்த மாதமே சர்க்கரை இருப்பு வரம்பு 30 நாட்களாகக் குறைக்கப்பட்டு இருந்தபோதிலும், சந்தையில் சர்க்கரையின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சர்க்கரையின் விலை சுமார் 10 சதவீதம் வரை அதிகரித்து சாதனை அளவை எட்டியுள்ளது.

இதன் காரணமாகவே மத்திய அரசு இருப்புக் கெடுவை 15 நாட்களாகக் குறைத்துள்ளது.

ADVERTISEMENT

கண்காணிப்பு

ஜிஎஸ்டி மற்றும் எச்எஸ்என் குறியீடுகள் மூலம் தீவிர கண்காணிப்பு

சர்க்கரை ஆலைகளிலிருந்து மொத்த நுகர்வோர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விநியோகம் செய்யப்படும் சர்க்கரையின் அளவை அரசு நேரடியாகக் கண்காணிக்கும்.

நிறுவனங்களின் சர்க்கரை நுகர்வு அளவானது அவர்களின் ஜிஎஸ்டி தாக்கல் மற்றும் சர்க்கரைக்கான எச்எஸ்என் குறியீடுகளின் அடிப்படையில் துல்லியமாக சரிபார்க்கப்படும்.

இந்த புதிய இருப்பு வரம்புக் கட்டுப்பாடானது 2026 செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை மூன்று மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இறக்குமதி

வரியில்லா சர்க்கரை இறக்குமதி செய்ய அரசு பரிசீலனை

சந்தையில் சர்க்கரையின் இருப்பை மேலும் அதிகரிக்கவும், சில்லறை விற்பனை விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் குறைந்த அளவிலான சுங்க வரியற்ற சர்க்கரையை இறக்குமதி செய்வது குறித்தும் மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

இத்திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில், கடந்த பத்தாண்டுகளில் முதன்முறையாக இந்தியா பெருமளவில் சர்க்கரையை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது.

அரசின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் பண்டிகைக் காலத்தில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT