இந்திய கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை குறைத்த மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
இந்திய கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை (Windfall Tax) டன்னுக்கு ரூ.6,300-ல் இருந்து ரூ.5,000 ஆகக் குறைத்திருக்கிறது மத்திய அரசு. இந்த வரிக்குறைப்பானது இன்று முதல் அமலுக்கும் வருகிறது.
சர்வதேச பிரச்சினைகளினால் வணிகங்களில் கிடைக்கும் கூடுதல் லாபத்தின் மீது விண்டுஃபால் வரி விதிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் பல நாடுகளின் முடிவுகள் கச்சா எண்ணெய் விலையின் ஏற்றம் மற்றும் இறக்கத்திற்கு காரணமாக இருக்கிறது.
எனவே கச்சா எண்ணெய் மீது சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் விண்டுஃபால் வரி விதிக்கப்படும் நீக்கப்பட்டும் வருகிறது. இந்த வரி விகிதமானது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சர்வதேச கச்சா எண்ணெய் விலையைப் பொருத்து மாற்றப்படும்.
வணிகம்
கச்சா எண்ணெய் மீது விண்டுஃபால் வரி:
அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நவம்பர் 16ம் தேதியன்று, அதற்கு முந்தைய இரு வார கச்சா எண்ணெய் சராசரியைப் பொருத்து, இந்திய கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை டன்னுக்கு ரூ.9,800-ல் இருந்து ரூ.6,300 ஆகக் குறைத்தது மத்திய அரசு.
தற்போது, கடந்த இரு வார சர்வதேச கச்சா எண்ணெய் சராசரி விலை குறைந்ததை முன்னிட்டு, இந்திய கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியானது மேலும் ரூ.1,300 குறைக்கப்பட்டிருக்கிறது.
இந்த விண்டுஃபால் வரியானது, சிறப்பு கூடுதல் கலால் வரி என்ற பெயரில் கச்சா எண்ணெய் மீது வதிக்கப்படுகிறது.
அதேபோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியானது லிட்டருக்கு ரூ.4-ல் இருந்து ரூ.2 ஆகக் குறைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.