தொடர் வைப்பு நிதிக்கான வட்டி வகிதத்தை உயர்த்திய மத்திய அரசு
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலானா காலாண்டிற்கான, சிறிய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் சில திட்டங்களில் மட்டும் மாற்றம் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. அதன்படி, வங்கிகள் மற்றும் வங்கியல்லாத பிற நிதி நிறுவனங்கள் வழங்கும் தொடர் வைப்பு நிதி (Recurrring Deposit) திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. அதாவது, தற்போது வரை தொடர் வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 6.5% வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், அடுத்த காலாண்டில் அதனை 6.7% ஆக உயர்த்தி அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இந்த சேமிப்புத் திட்டத்தைத் தவிர பிற திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு எந்த வித மாற்றத்தையும் செய்யவில்லை.
பிற சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம்:
பிற சேமிப்புத் திட்டங்களான, பொது வைப்பு நிதி திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்ட திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. தொடர்ந்து 14வது காலாண்டாக, பொது வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மாற்றாமல் 7.1% என்ற அளவிலேயே அளித்து வருகிறது மத்திய அரசு. அதே போல் சாதாரண சேமிப்பு வைப்பு நிதியின் மீதான 4% வட்டி விகிதமும் அப்படியே தொடர்கிறது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்திற்கு அதிகபட்சமாக 8.2% வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், இனியும் அப்படியே தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.