Loading...
விவசாயிகளுக்கு நற்செய்தி; வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தை 2027 மார்ச் வரை நீட்டித்தது மத்திய அரசு
வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தை 2027 மார்ச் வரை நீட்டித்தது மத்திய அரசு

விவசாயிகளுக்கு நற்செய்தி; வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தை 2027 மார்ச் வரை நீட்டித்தது மத்திய அரசு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 25, 2026
06:27 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் விவசாயிகளின் அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்திற்கான கடன் வழங்கும் காலக்கெடுவை 2027 மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய அரசின் செலவினத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக 2026 செப்டம்பர் 30 வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்த இதற்கான காலக்கெடு தற்பொழுது மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோர்கள் புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கு கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.

கடன் உதவி

₹1.03 லட்சம் கோடி கடனுதவி ஒப்புதல் மற்றும் பயனாளிகள் விவரம்

கடந்த 2020-21 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் அக்டோபர் 25 நிலவரப்படி நாடு முழுவதும் 228,428 திட்டங்களுக்கு ₹1.03 லட்சம் கோடி கடனுதவி வங்கிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றவர்களில் 55 சதவீதம் பேர் தனிநபர் விவசாயிகள் ஆவர்.

மேலும் வேளாண் தொழில்முனைவோர்கள் 32 சதவீதமும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் 3.1 சதவீதமும் பயனடைந்துள்ளன.

இத்திட்டத்தைப் பொறுத்தவரை மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

வட்டி மானியம்

3 சதவீத வட்டி மானியம் மற்றும் திட்டத்தின் நிதி வரம்புகள்

வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் வட்டி மானியம் அதிகபட்சமாக 7 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் அரசு சார்பில் கடன் உத்திரவாத சலுகைகளும் பயனாளிகளுக்குக் கிடைக்கின்றன.

13 ஆண்டுகள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மொத்த கடன் இலக்கை ₹2 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்கப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் மூலம் கிராமப்புறங்களில் அதிநவீன குளிர்சாதனக் கிடங்குகள் மற்றும் சேமிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

அறுவடை

அறுவடைக்குப் பிந்தைய கழிவுகளைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை

இந்தியாவில் அறுவடைக்குப் பிந்தைய முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ஆண்டுதோறும் சுமார் ₹1.53 லட்சம் கோடி மதிப்பிலான விவசாய விளைபொருட்கள் வீணாகின்றன.

இந்த போக்கை மாற்றவே முதன்மை பதப்படுத்தும் மையங்களுக்கு ₹25,119.5 கோடியும், சேமிப்புக் கிடங்குகளுக்கு ₹18,064 கோடியும், குளிர்சாதனக் கிடங்குகளுக்கு ₹11,718 கோடியும் கடனாக வழங்கப்பட்டுள்ளன.

விளைபொருட்களை சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்ய இத்திட்டம் விவசாயிகளுக்கு உறுதுணையாக அமைகிறது.

ADVERTISEMENT