Loading...
₹62,124 கோடி வசூல்; பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் 5 மாதங்களில் 78% இலக்கை எட்டியது மத்திய அரசு
பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் 5 மாதங்களில் 78% இலக்கை எட்டியது மத்திய அரசு

₹62,124 கோடி வசூல்; பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் 5 மாதங்களில் 78% இலக்கை எட்டியது மத்திய அரசு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 28, 2026
07:05 pm

செய்தி முன்னோட்டம்

நடப்பு 2026-27 நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மற்றும் அரசு சொத்துகளைப் பணமாக்குதல் மூலம் ₹80,000 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. நிதி ஆண்டு தொடங்கி முதல் 5 மாதங்களிலேயே இந்த இலக்கில் சுமார் 78 சதவீதத்தை எட்டி மத்திய அரசு சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இதுவரை கருவூலத்திற்கு மொத்தம் ₹62,124 கோடி மூலதன வரவாகக் கிடைத்துள்ளது.

பங்கு விற்பனை

எல்ஐசி மற்றும் கோல் இந்தியா பங்குகள் விற்பனை

9 பொதுத்துறை நிறுவனங்களின் சிறுபான்மை பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் மட்டும் அரசுக்கு ₹55,757 கோடி கிடைத்துள்ளது.

இதில் அதிகபட்சமாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) 6.5 சதவீதப் பங்குகளை விற்றதன் மூலம் ₹31,515 கோடியும், கோல் இந்தியா நிறுவனத்தின் 2 சதவீதப் பங்குகளை விற்றதன் மூலம் ₹5,542 கோடியும் திரட்டப்பட்டது.

மேலும் என்ஹெச்பிசி நிறுவனத்தின் 6.01 சதவீதப் பங்குகள் மூலம் ₹4,357 கோடி கிடைத்துள்ளது.

சொத்து பணமாக்கல்

பிற நிறுவன பங்குகள் மற்றும் சொத்துகள் பணமாக்கல்

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் 6 சதவீத பங்குகளை விற்றதன் மூலம் இந்த வாரத் தொடக்கத்தில் ₹3,041 கோடி திரட்டப்பட்டது.

இவை தவிர சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, என்எல்சி இந்தியா, ஜிஐசி, ஐஆர்எஃப்சி மற்றும் கொச்சின் ஷிப்யார்டு ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மேலும், உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் வாயிலாக சொத்துகளை பணமாக்கியதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாயாக ₹6,367 கோடி கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

நிதியாண்டு

நிதியாண்டு இறுதிக்குள் முழு இலக்கையும் எட்டத் திட்டம்

இந்திய மெடிசின்ஸ் பார்மாசூட்டிகல்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூலோபாயப் பங்கு விற்பனை மற்றும் SUUTI அமைப்பிலிருந்து பெறப்பட்ட நிதியும் இதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது.

வழக்கமாக நிதியாண்டின் இறுதியில் மட்டுமே பங்கு விற்பனை இலக்கு எட்டப்படும் நிலையில், இம்முறை முதல் ஐந்து மாதங்களிலேயே 78 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் நிர்ணயிக்கப்பட்ட ₹80,000 கோடி முழு இலக்கையும் அரசு எளிதாகக் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT