மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 2% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு; மேலும் பல திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படுகிறது. வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அறிவிக்கப்படும் இந்த உயர்வு, இந்த முறை சில காலதாமதத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, இந்தத் தாமதம் குறித்து கவலை தெரிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
கடல்சார்நிதி
இறையாண்மை கடல்சார் நிதி உருவாக்கம்
மத்திய அமைச்சரவை இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக, இந்தியக் கொடியிடப்பட்ட கப்பல்கள் மற்றும் இந்தியாவிற்கு வந்து செல்லும் கப்பல்களுக்கு நிலையான மற்றும் மலிவு விலையில் காப்பீடு வழங்கும் நோக்கத்துடன், ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் இறையாண்மை கடல்சார் நிதி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தை உலக அளவில் வலுப்படுத்தவும், கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்குப் பாதுகாப்பை வழங்கவும் உதவும்.
சாலை மேம்பாடு
சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் விரிவாக்கம்
கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், பிரதமர் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் 2028 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கூடுதலாக ரூ. 3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது. இதன் மூலம், நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் எளிதாக்கப்படும். சாலை உள்கட்டமைப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்பதால், இந்தத் திட்டத்தின் விரிவாக்கம் கிராமப்புற வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.