வெங்காய ஏற்றுமதியின் மீது 40% ஏற்றுமதி வரி விதித்திருக்கும் மத்திய அரசு
இந்தியாவில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுக்குள் வைக்க, வெங்காயத்தின் மீது 40% ஏற்றுமதி வரியை அமல்படுத்துவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இந்த ஏற்றுமதி வரியானது இந்த ஆண்டு இறுதி வரை அமலில் இருக்கும் எனவும், அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது மத்திய அரசு. இந்த அறிவிப்பு குறித்து நுகர்வோர் நலத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங் பேசும் போது, இந்தியாவில் விழாக்காலம் நெருங்குவதைத் தொடர்ந்து, உள்நாட்டு விநியோகத்தை ஊக்குவிக்கவே இந்த ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், வெங்காயத்தின் ஏற்றுமதி அளவு திடீரென உயர்வைச் சந்தித்திருப்பதும் இந்த வரி விதிப்பிற்கான காரணமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர்.
இந்தியாவில் உயர்கிறதா வெங்காய விலை?
குறைந்தபட்சமாக ரூ.10-க்கும், அதிகபட்சமாக ரூ.63-க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ.37 என்ற அளவில் வெங்காயம் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மழைக்காலத்தில் வெங்காயத்தின் வரத்து குறைந்திருப்பதை அடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக வெங்காய விலை உயர்ந்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த ஆண்டு 3 லட்சம் டன் வெங்காயக் கையிருப்பைக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. வெங்காய விலையைக் கட்டுப்படுத்த, இதில் 2000 டன்களை கடந்த வாரம் முக்கிய சந்தைகளின் மொத்த விற்பனைக் கடைகளின் மூலம் விற்பனை செய்திருக்கிறது மத்திய அரசு. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெங்காய விலையைக் கட்டுக்குள் வைக்க, எப்போது மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுப்பது வழக்கம் தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.