ஹோட்டல் பில்லில் சர்வீஸ் சார்ஜ் போட்டால் கட்டாயம் கட்ட வேண்டுமா? நுகர்வோர் அறிய வேண்டியவை
செய்தி முன்னோட்டம்
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி, அவர்களது உணவு பில்லில் சர்வீஸ் சார்ஜ் (சேவைக்கட்டணம்) என்ற பெயரில் கூடுதல் தொகையை தானாகவே சேர்ப்பதற்கு எதிராக மத்திய அரசு தற்போது கடுமையான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்(CCPA), விதிகளை மீறியதாக இந்தியாவின் முன்னணி உணவகச் சங்கிலிகளான சாய்ஓஸ் (Chaayos), பார்பிக்யூ நேஷன் உள்ளிட்ட 41 உணவகங்களுக்கு எதிராக தன்னிச்சையாக விசாரணையை தொடங்கி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
அபராதம்
சாய்ஓஸ் நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம்
தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் (NCH) மூலம் நுகர்வோர் அளித்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்திய CCPA, பிரபல தேநீர் சங்கிலி நிறுவனமான சாய்ஓஸ் உணவகத்திற்கு ₹50,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட நுகர்வோரிடம் வசூலித்த சேவைக்கட்டணத்தை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் பில் போடும் மென்பொருளில் தானாக சர்வீஸ் சார்ஜ் சேராதவாறு மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சாய்ஓஸ் தவிர, எல்'ஓபெரா, சைனா கேட், கஃபே புளூ பாட்டில் உள்ளிட்ட பல முன்னணி உணவகங்களுக்கும் இறுதி எச்சரிக்கை மற்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தீர்ப்பு
டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் தகவல்படி, கடந்த மார்ச் 28, 2025 அன்று டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், CCPA அமைப்பின் சேவைக்கட்டண வழிகாட்டுதல்கள் செல்லும் என உறுதிப்படுத்தியுள்ளது.
உணவகங்கள் வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தி சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும், விதிமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க CCPA-வுக்கு முழு அதிகாரம் உண்டு என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
"இந்த விவகாரத்தை நான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளேன். சட்டவிரோதமாக இந்த நடைமுறையைத் தொடரும் உணவகங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுவதோடு, அது அவர்களின் நற்பெயரையும் பாதிக்கும்" என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முக்கிய விதிகள்
சர்வீஸ் சார்ஜ் பற்றி நுகர்வோர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிகள்
சர்வீஸ் சார்ஜ் என்பது அரசு விதிக்கும் வரி (GST) அல்ல. அது முற்றிலும் நுகர்வோரின் விருப்பத்திற்கு உட்பட்டது.
உணவகங்கள் தங்களின் உணவுப் பில்லில் தானாகவோ அல்லது முன்னரே அச்சிட்டோ சர்வீஸ் சார்ஜ்-ஐ சேர்க்கக் கூடாது.
சர்வீஸ் சார்ஜ் கொடுக்க மறுக்கும் வாடிக்கையாளர்களுக்கு உணவகத்திற்குள் நுழையவோ அல்லது சேவை வழங்கவோ மறுக்கக் கூடாது.
வழிகாட்டுதல்களைத் தவிர்க்க வேறு எந்தப் பெயரிலும் இக்கட்டணத்தை மறைமுகமாக வசூலிக்கக் கூடாது.
உணவுப் பில்லில் சர்வீஸ் சார்ஜ் தொகையையும் சேர்த்து, அதற்கு மேல் ஜிஎஸ்டி (GST) கணக்கிடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மெனு கார்டில் 'சர்வீஸ் சார்ஜ் பொருந்தும்' என்று எழுதப்பட்டிருந்தாலும், அதை வாடிக்கையாளர் கட்டாயம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
நுகர்வோர் பாதுகாப்பு
ஹோட்டலில் கட்டாயப்படுத்தினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஏதேனும் ஒரு உணவகம் உங்கள் பில்லில் தானாக சர்வீஸ் சார்ஜ் சேர்த்திருந்தால், அதை உடனடியாக நீக்கும்படி நீங்கள் ஹோட்டல் நிர்வாகத்திடம் கோரலாம்.
அவர்கள் நீக்க மறுத்தால், அந்த பில்லின் நகலை ஆதாரமாக வைத்துக்கொண்டு, மத்திய அரசின் தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் 1915 என்ற கட்டணமில்லா எண்ணை அழைத்தோ அல்லது NCH இணையதளம் மூலமாகவோ உடனடியாகப் புகார் அளிக்கலாம்.