22.5 பில்லியன் ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்த பைஜூஸின் தாய் நிறுவனமான 'திங்க் அண்டு லேர்ன்'
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி கற்றல் சேவை ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸின் தாய் நிறுவனமான திங்க் அண்டு லேர்ன் நிறுவனமானது, நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு தற்போது தங்களது நிதி தொடர்பான தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அதன்படி மார்ச் 2022ம் ஆண்டு நிறைவடைந்த நிதியாண்டில் 22.5 பில்லியன் ரூபாய் நஷ்டமடைந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கு முந்தைய காலாண்டில் அந்நிறுவனம் 24 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், அந்நிறுவனத்தின் வருவாயானது அந்தக் குறிப்பிட்ட நிதியாண்டில் 35.7 பில்லியன் ரூபாய் வரை இரு மடங்காக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தோல்வியடைந்த பைஜூஸ்:
கொரோனா காலாத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், ஆன்லைன் கற்றல் சேவை நிறுவனமான பைஜூஸின் சேவையை பெரும்பாலான மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். அந்த சமயத்தில் அதிகரித்த தேவையைப் பூர்த்தி செய்ய பல கோடி ரூபாய்களை முதலீடாகப் பெற்றது பைஜூஸ் நிறுவனம். மேலும், இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனமாகவும் கொண்டாடப்பட்டது. எனினும், கொரோனா காலத்திற்குப் பிறகு பள்ளி கல்லூரிகள் திறந்த பிறகு, பைஜூஸ் நிறுவனத்தின் பயனாளர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. அதனைத் தொடர்ந்து கொரோனா காலத்தில் தாங்கள வாங்கியிருந்த 1.2 பில்லியன் டாலர்கள் கடனை செலுத்தத் தவறி, தற்போது அதுதொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது.
பைஜூஸ் முதலீட்டாளர்களும் அந்நிறுவத்தின் மீது வழக்கு:
கடனை திருப்பிச் செலுத்தாதது மட்டுமின்றி, 500 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய பணத்தை பைஜூஸ் நிறுவனம் மறைத்து வைத்திருப்பதாகவும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்த பல்வேறு அமெரிக்க முதலீட்டாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். மேலும், அந்நிய நாட்டு பணப்பரிவர்த்தனை விதிமுறைகளை மீறியிருப்பதாகக் கூறி கடந்த ஏப்ரல் மாதம் பைஜூஸ் நிறுவத்தின் பெங்களூரு அலுவலகத்தில் சோதனையும் நடைபெற்றது. இறுதியாக, கடந்த ஆண்டு 22 பில்லியன் டாலர்கள் மதிப்புடன் திகழ்ந்த பைஜூஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த முக்கியமான முதலீட்டு நிறுவனங்களுள் ஒன்றான ப்ராசஸ் NV நிறுவனம், பைஜூஸின் மதிப்பை 5.1 பில்லியன் டாலர்களாகக் குறைத்திருக்கிறது.