சொந்த வீட்டை அடமானம் வைத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்த பைஜூஸ் நிறுவனர் பைஜூ ரவீந்திரன்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் முன்னணி கற்றல் சேவை ஸ்டார்ட்அப் நிறுவனமாக விளங்கி வந்த பைஜூஸ், கடந்த சில காலமாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தள்ளாடி வருகிறது. இந்நிலையில், அந்நிறுவனத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார், பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனர் பைஜூ ரவீந்திரன். தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க, தன்னுடைய மற்றும் தன் குடும்பத்தினரின் வீடுகளை அடமானம் வைத்து அவர் நிதி திரட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. பைஜூ ரவீந்திரனின் குடும்பத்தாருக்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள இரண்டு வீடுகள் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வில்லா ஆகியவற்றுக்கு இணையாக, 12 மில்லியன் டாலர்களை நிதியைத் திரட்டியிருக்கிறார் அவர்.
நிதி நெருக்கடியில் பைஜூ ரவீந்திரன்:
அந்த நிதியைக் கொண்டு பைஜூஸ் தாய் நிறுவனமான திங்க் அண்டு லேர்ன் நிறுவனத்தின் 15,000 ஊழியர்களுக்கான சம்பளத்தை அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த தங்கள் வசமுள்ள குழந்தைகளுக்கான வாசிப்புத் தளம் ஒன்றையும் 400 மில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு விற்பனை செய்யும் திட்டத்தில் இருக்கிறது பைஜூஸ். இது தவிர, தன்னிடமிருந்த திங்க் அண்டு லேர்ன் நிறுவனத்தின் பங்குகளையும் அடமானம் வைத்து, தனிப்பட்ட முறையிலும் 400 மில்லியன் டாலர்கள் வரை நிதி திரட்டிய அதனையும் பைஜூஸின் செயல்பாடுகளுக்காக பைஜூ ரவீந்திரன் செலவழித்திருப்பதாகத் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பைஜூஸ் நிறுவனம் மட்டுமல்லாது, பைஜூ ரவீந்திரனும் தனிப்பட்ட முறையில் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது.