திருமணமான தம்பதியினர் கூட்டாக வருமான வரி தாக்கல் செய்யும் முறை; பட்ஜெட் 2026-ல் மாற்றம்?
செய்தி முன்னோட்டம்
மத்திய பட்ஜெட் 2026-க்கான தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வருமான வரி முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஐசிஏஐ (ICAI) முன்மொழிந்துள்ளது. தற்போது இந்தியாவில் ஒவ்வொரு தனிநபரும் தனித்தனியாகவே வரி தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளை போல, திருமணமான தம்பதியினர் தங்களது வருமானத்தை சேர்த்து 'கூட்டு வரி அறிக்கை' (Joint ITR) தாக்கல் செய்யும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த முறை தற்போதைய பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முன்மொழிவு
தம்பதியரின் மொத்த வருமானம் கணக்கெடுக்கப்படும்
இந்த முன்மொழிவின்படி, தம்பதியினரின் மொத்த வருமானம் ஒன்றாகக் கணக்கிடப்படும். இதனால் அடிப்படை வரி விலக்கு வரம்பு தற்போதைய ₹4 லட்சத்திலிருந்து (புதிய வரி முறை) ₹8 லட்சமாக உயரும். மேலும், ₹48 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தம்பதிகளுக்கு 30% என்ற அதிகபட்ச வரி விகிதம் பொருந்தாது; அதற்கு மேல் வருமானம் இருந்தால் மட்டுமே அந்த வரி விதிக்கப்படும். இது குறிப்பாக சம்பளம் வாங்கும் ஒரே ஒரு நபர் இருக்கும் குடும்பங்களுக்கு பெரும் நிதி நிவாரணத்தை வழங்கும்.
சேமிப்பு
"தம்பதிகளின் முடிவிற்கு விடப்படும்"
இந்த முறை கட்டாயமானதல்ல, விருப்பத்தின் அடிப்படையிலானது என்றும் ICAI தெரிவித்துள்ளது. தம்பதிகள் தங்களுக்கு தனித்தனியாக வரி கட்டுவது லாபமா அல்லது கூட்டாக கட்டுவது லாபமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்கலாம். இதன் மூலம் நடுத்தர குடும்பங்களின் சேமிப்பு அதிகரிப்பதுடன், வருமானத்தை பிரித்து காட்டி வரி ஏய்ப்பு செய்யும் முறையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த முறையில் சவால்களும் உள்ளது. இந்தியாவின் வரி உள்கட்டமைப்பு தனிநபர் PAN அடிப்படையிலான தாக்கல், TDS மற்றும் TCS அமைப்புகளை சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது, இதற்கு குறிப்பிடத்தக்க மறுவடிவமைப்பு தேவைப்படும். வருவாய் கசிவு மற்றும் அதிக வருமானம் ஈட்டும் இரட்டை வருமானம் ஈட்டும் தம்பதிகள் கூட்டு மதிப்பீட்டின் கீழ் அதிக வரி பொறுப்பை எதிர்கொள்ள நேரிடும் கவலைகளும் உள்ளன.