
இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த முதலீடுகளை வியட்நாமிற்குத் திருப்பிய சீன நிறுவனமான லக்ஸ்ஷேர், ஏன்?
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் சீனா இடையே எல்லைப் பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்து வருவது, இந்தியாவில் செயல்பட்டு வரும் சீன நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகம் செய்வதற்கும், வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் தடையாக இருந்து வருகிறது.
சீன ஆட்டோமொபைல் நிறுவனமான SAIC-ன் கீழ் இருக்கும் எம்ஜி, மற்றும் நேரடியாக சீனாவைச் சேர்ந்த BYD உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது செயல்பாடுகளை விஸ்தரிக்க இந்திய அரசு அனுமதிக்கவில்லை.
சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி பெறுவது குதிரைக் கொம்பாகி வருகிறது.
மேற்கூறிய நிறுவனங்களைத் தொடர்ந்து சீனாவைச் சேர்ந்த லக்ஸ்ஷேர் (Luxshare) என்ற நிறுவனத்திற்கும் இந்தியாவில் வர்த்தகத்தை விஸ்தரிக்க தடங்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த முதலீடுகளை வியட்நாமிற்கு திருப்பியிருக்கிறது அந்நிறுவனம்.
வணிகம்
இந்தியாவில் லக்ஸ்ஷேர் நிறுவனத்திற்குத் தடங்கல்:
சீனாவைச் சேர்ந்த வாங் லைச்சுன் என்பவர் 2019ம் ஆண்டு இந்தியாவில் லக்ஸ்ஷேர் நிறுவனத்தைத் தொடங்கினார்.
2020ம் ஆண்டு தமிழகத்தில் செயலபடாமல் இருந்த மோட்டோரோலா தொழிற்சாலை ஒன்றை ரூ.750 கோடி முதலீட்டில் வாங்கத் திட்டமிட்டது லக்ஸ்ஷேர். ஆனால், இந்தியா-சீனா பிரச்சினை காராணமாக மேற்கொண்டு சீன நிறுவனங்களின் முதலீடுகளை இந்தியா ஆதரிக்கவில்லை.
மேலும், அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுக்கான இந்தியா விசாவானது பலமுறை நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
எம்ஜி நிறுவனத்தைப் போல இந்தியாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் கூட்டு முயற்சியாக வர்த்தகம் செய்யும் நிபந்தனையின் பேரில் முதற்கட்ட அனுமதிகளை லக்ஸ்ஷேருக்கு வழங்கியது இந்திய அரசு. ஆனால், நிச்சயமில்லாத நிலையில் தங்களால் இந்தியாவில் முதலீடு செய்ய முடியாது எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
சீனா
வியட்நாமில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு:
வியட்நாமில் ஏற்கனவே இந்திய மதிப்பிற்கு சுமார் ரூ.1,500 கோடிகளை முதலீடு செய்திருக்கிறது லக்ஸ்ஷேர். இந்தியாவில் தொடர்ந்து தங்கள் முதலீடுகளுக்கு தடை ஏற்பட்டு வந்ததையடுத்து, இந்தியாவில் அந்நிறுவனம் மேற்கொள்ளவிருந்த ரூ.2,750 கோடி மதிப்பிலான முதலீடுகளை தற்போது வியட்நாமிற்கு திருப்பியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து வியட்நாமில் லக்ஸ்ஷேரின் முதலீடு இந்திய மதிப்பில் ரூ.4,200 கோடியாக அதிகரித்திருக்கிறது. லக்ஸ்ஷேர் நிறுவனத்திற்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் சமீபத்திலேயே அந்நாட்டு அரசு அந்நிறுவனத்திற்கு அளித்திருக்கிறது.
வியட்நாமில் அமையவிருக்கும் 72 ஏக்கர் பரப்பளவிலான புதிய தொழிற்சாலையில் ஸ்மார்ட்போன் கேபிள்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைத் தயாரிக்கவிருக்கிறது லக்ஸ்ஷேர். இந்நிறுவனம் ஆப்பிளின் மின்னணு சாதன விநியோக நிறுவனங்களுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.