இந்தியாவில் அதிகரித்த ஐபோன் விற்பனை.. முதலீட்டாளர் கலந்துரையாடலில் டிம் குக்
செப்டம்பர் வரை நிறைவடைந்த காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலின் போது இந்திய சந்தை குறித்த தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார் ஆப்பிளின் சிஇஓவான டிம் குக். இந்தாண்டுத் தொடக்கத்தில் இந்தியாவில் முதன் முறையாக தங்களுடை நேரடி விற்பனைக் கடைகளைத் திறந்தது ஆப்பிள். மும்பை மற்றும் டெல்லி ஆகிய இரு நகரங்களில் இந்தியாவின் ஆப்பிளின் முதல் நேரடி விற்பனைக் கடைகள் தொடங்கப்பட்டன. இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கும் ஆப்பிளின் நேரடிக் கடைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அவர், இந்தப் புதிய கடைகளின் செயல்பாடுகளும் திருப்தியளிக்கும் விதமாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
தனிச்சிறப்பு வாய்ந்த இந்திய சந்தை:
உலகளவில் பல்வேறு நாடுகளின் ஸ்மார்ட்போன் சந்தைகளில் ஐபோன் கோலோச்சினாலும், அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் குறைவான வர்த்தகப் பங்குகளைக் கொண்டிருப்பது, ஆப்பிளின் வளர்ச்சிக்கு கூடுதல் வாய்ப்புகள் இருப்பதையே உணர்த்துகிறது எனத் தெரிவித்திருக்கிறார் டிம் குக். இந்தியாவில் இந்தக் காலாண்டில் ஐபோன் விற்பனை அதிகரித்ததைத் தொடர்ந்து, ஐபோன் மூலம் கிடைக்கும் வருவாயும் உயர்ந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர். ஆனால், ஒட்டுமொத்தமாக இந்தியாவில் முந்தைய காலாண்டை விட கடந்த காலாண்டில் ஆப்பிளின் வருவாய் குறைவு தான். எனினும், இந்திய சந்தை நம்பிக்கையளிக்கும் விதமாகவே இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் டிம் குக்.