
'மறுசீரமைப்பு' திவால் நடவடிக்கைக்கு கோரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்க ஸ்டார்ட்அப்பான வீவொர்க்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த வீவொர்க் (WeWork) நிறுவனமானது நியூ ஜெர்ஸி ஃபெடரல் நீதிமன்றத்தில் மறுசீரமைப்பு திவால் கோரி பதிவு செய்திருக்கிறது.
அலுவலங்களுக்கு தேவையான இடங்களை Space-as-a-Service முறையில் வாடகைக்கு வழங்கி வரும் இந்நிறுவனம், 39 நாடுகளில் 777 அலுவலக இடங்களைக் கொண்டிருக்கிறது.
2019ம் ஆண்டு கொரோனாவிற்கு முன்பு இந்நிறுவனத்தை 49 பில்லியன் டாலர்களாக மதிப்பிட்டிருந்தது அமெரிக்காவைச் சேர்ந்த சாஃப்ட்பேங்க் வங்கி.
அப்போதே அமெரிக்க பங்குச்சந்தையில் நுழைய முயன்று, பல்வேறு காரணங்களால் அந்த முயற்சி தடைப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்போதைய வீவொர்க் நிறுவத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான ஆடம் நியூமன் தன்னுடைய பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.
வணிகம்
தோல்வியடைந்த வீவொர்க்:
2019ம் ஆண்டு கொரோனா பரவத் தொடங்கிய நிலையில், 2020ம் ஆண்டில் உலகம் முழுவதும் அலுவலகங்கள் அடைக்கப்பட்டு, பெரும்பாலான
அலுவலக பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கத் தொடங்கினர். அலுவலக இடங்களை அடிப்படையாகக் கொண்டதே வீவொர்க்கின் வணிகம். எனவே, கொரோனா காலத்தில் கடுமையான இழப்புகளைத் சந்தித்தது அந்நிறுவனம்.
2021ம் ஆண்டு தொடக்கத்தில் அதன் மதிப்பு 47 பில்லியன் டாலர்களில் இருந்து 9 பில்லியன் டாலர்களாகச் சரிந்தது. அந்த ஆண்டே சிறப்பு நோக்கத்துடனான கையகப்படுத்தல் நிறுவனமாக குறைந்த மதிப்பீட்டுடன் அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.
வீவொர்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாள் முடிவில் 11.78 டாலர்கள் விலையில் அன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது.
அமெரிக்கா
திவால் நடவடிக்கைக்குப் பதிவு:
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து கடன்களை அடைக்க அந்நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலனளிக்காத நிலையில், தற்போது சாப்டர் 11 திவால் நடவடிக்கைக்கு கோரியிருக்கிறது அந்நிறுவனம்.
அதாவது, அந்நிறுவனம் தங்களுடைய வணிகச் செயல்பாடுகளை நிறுத்தாமல், அதேநேரம் கடன்களை திருப்பி செலுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்த உதவும் வகையிலான கோரிக்கை இது.
தற்போது அந்நிறுவனத்தின் சொத்து மற்றும் கடன் மதிப்பானது 10 முதல் 50 பில்லியன் டாலர்களுக்குள் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
மேலும், அந்நிறுவனப் பங்குகள் தற்போது 0.83 டாலர்கள் விலையில் நியூயார்க் பங்குச்சந்தையில் தற்போது வர்த்தகமாகி வருகின்றன. இது பங்குச்சந்தையில் அந்நிறுவனம் பட்டியலிடப்பட்ட மதிப்பை விட 99% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.