'இனி 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மாட்டோம்', அமேசான் அறிவிப்பு
இந்தியாவில் புழக்கத்திலிருந்த 2000 ரூபாய் நோட்டுக்களை, திரும்பப் பெறுவதாகக் கடந்த மே மாதம் அறிவித்தது ரிசர்வ் வங்கி. மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள செப்டம்பர்-30ம் தேதி வரை அவகாசமும் அளித்திருந்தது ரிசர்வ் வங்கி. 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான அவகாசம் நிறைவடைய இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், கேஷ்-ஆன்-டெலிவரி ஆர்டர்களுக்கு வரும் செப்டம்பர்-19ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படமாட்டாது எனத் தங்களுடைய வலைப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது அமேசான். அமேசானே நேரடியாக டெலிவரி செய்யும் ஆர்டர்களில் மட்டுமே இந்த நடவடிக்கை என்றும், மூன்றாம் தரப்பு டெலிவரி நிறுவனங்கள் மூலம் டெலிவரி செய்யப்படும் ஆர்டர்களில் 2000 ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுக்கள்:
2000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறவிருப்பதாக வெளியான அறிவிப்புக்குப் பிறகு, கடந்த செப்டம்பர் 1ம் தேதி வரை புழக்கத்திலிருக்கும் 93% ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தாலும், தேவைப்படும் பட்சத்தில் ரிசர்வ் வங்கி அதனை நீட்டிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களில் 87% வைப்புத் தொகையாகவே வந்து சேர்ந்திருப்பதாகவும், 13% நோட்டுக்களை மட்டுமே மாற்றி மக்கள் வேறு ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுச் சென்றதாகவும் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.