Page Loader
'சைவ உணவு டெலிவரி செய்யும் ஆட்களுக்கு தனி சீருடை இல்லை': முடிவை மாற்றியது சோமாட்டோ

'சைவ உணவு டெலிவரி செய்யும் ஆட்களுக்கு தனி சீருடை இல்லை': முடிவை மாற்றியது சோமாட்டோ

எழுதியவர் Sindhuja SM
Mar 20, 2024
10:03 am

செய்தி முன்னோட்டம்

அனைத்து டெலிவரி ஆட்களும் சிவப்பு நிற சீருடை தான் அணிவார்கள் என்று சோமாட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார். சுத்த சைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்காக 'Pure Veg Fleet' உடன் 'Pure Veg Mode'ஐ நேற்று அறிமுகப்படுத்தியது சோமாட்டோ. 'Pure Veg Fleet' என்பது சோமாட்டோ நேற்று அறிமுகப்படுத்திய டெலிவரி சேவையாகும். சுத்த சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்யும் அந்த டெலிவரி ஆட்கள், பச்சை நிற உடை அணிந்திருப்பார்கள் என்றும், பச்சை நிற உணவு பை வைத்திருப்பார்கள் என்றும் சோமாட்டோ நேற்று தெரிவித்திருந்தது. ஆனால், இந்த அறிமுகத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

சோமாட்டோ

'பச்சை நிற சீருடை அகற்றம்':  சோமாட்டோ சிஇஓ

சுத்த சைவ உணவுக்கு தனிப்படை அமைத்தது சமூகத்தை பிளவுபடுத்துவது போல் இருக்கிறது என்று பலர் இதை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று இது குறித்து பதிவிட்டிருக்கும் சோமாட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், 'Pure Veg Fleet'டெலிவரி ஆட்களுக்கு தனி சீருடை வழங்கப்படாது என்று அறிவித்துள்ளார். "சைவ உணவு உண்பவர்களுக்கான தனிப்படை தொடரும். அதே நேரத்தில், இந்த தனிப்படையின் பச்சை நிற சீருடையால் சமூகத்தில் ஏற்படக்கூடும் பிரிவினையை அகற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம். அசைவ உணவு டெலிவரி செய்பவர்களும், சைவ உணவு டெலிவரி செய்பவர்களும், அதாவது எங்கள் டெலிவரி ஆட்கள் அனைவரும், வழக்கமான சிவப்பு நிற சீருடைகளையே அணிவார்கள்." என்று அவர் தெரிவித்துள்ளார்.