Loading...
சர்க்கரை குறைந்தபட்ச விலை கிலோவுக்கு ₹42 ஆக உயர்கிறதா? மத்திய அரசிடம் கோரிக்கை
சர்க்கரை குறைந்தபட்ச விற்பனை விலையை ரூ.42 ஆக உயர்த்த கோரிக்கை

சர்க்கரை குறைந்தபட்ச விலை கிலோவுக்கு ₹42 ஆக உயர்கிறதா? மத்திய அரசிடம் கோரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 06, 2026
10:30 am

செய்தி முன்னோட்டம்

சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை (MSP) தற்போதுள்ள கிலோவிற்கு ₹31-லிருந்து ₹42 ஆக 35 சதவீதம் உயர்த்த வேண்டும் என அகில இந்திய சர்க்கரை வர்த்தக சங்கம் (AISTA) மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநில கரும்பு விவசாயிகளின் போராட்டங்களைத் தணிக்க அமைக்கப்பட்ட ரமேஷ் சந்த் தலைமயிலான குழுவிடம் இதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு சர்க்கரை விலை மாற்றப்படாமல் உள்ளதால் ஆலைகள் உற்பத்திச் செலவைக் காட்டிலும் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய முறை

கரும்புக்கான அரசின் FRP விலைக்கு ஆதரவும் புதிய செலுத்துகை முறையும்

மத்திய அரசு 2026-27 பருவத்திற்கு நிர்ணயித்த கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலை (FRP) குவிண்டாலுக்கு ₹365 என்பது நியாயமானது என அகில இந்திய சர்க்கரை சர்க்கரை வர்த்தக சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் குஜராத்தில் பின்பற்றப்படும் இரு அடுக்குக் கட்டண முறையை நாடு முழுவதும் அமல்படுத்த குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையின்படி விவசாயிகள் கரும்பு விநியோகித்த 7 முதல் 14 நாட்களுக்குள் முழு தொகையையும் பெறலாம் அல்லது மூன்று தவணைகளில் 10 சதவீத பிரீமியம் தொகையுடன் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.

கால அவகாசம்

எத்தனால் தயாரிப்புக் கடன்களை திருப்பி செலுத்த இரு ஆண்டுகள் அவகாசம் கோரிக்கை

மோசமான வானிலை காரணமாக சர்க்கரை உற்பத்தியில் ஏற்படும் சரிவு எத்தனால் தயாரிப்பையும் பாதிக்கும் என்பதால் ஆலைகளால் கடன்களை முறையாக திருப்பி செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

எனவே எத்தனால் திட்டங்களுக்காக ஆலைகள் வாங்கிய கடன்களைத் திருப்பி செலுத்த இரு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த காலத்தில் வங்கிக் கடன்களுக்கான வட்டி மானியத்தை 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தி வழங்கி ஆலைகளை வாராக்கடன் அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT