ஏர் இந்தியா பயணிகள் கவனத்திற்கு! தினமும் 100 விமானச் சேவைகள், இலவச சாப்பாடு ரத்து?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா-ஈரான் மோதல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருள்(ATF) விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா, வரும் ஜூன் மாதம் முதல் தினமும் சுமார் 100 விமானச் சேவைகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் தினசரி 1,100 விமானச் சேவைகளில் கிட்டத்தட்ட 10% ஆகும். எரிபொருள் பயன்பாடு அதிகம் உள்ள ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய வழித்தடங்களில் விமானச் சேவைகள் பெருமளவு குறைக்கப்படவுள்ளன. பாகிஸ்தான் வான்பரப்பு மூடப்பட்டிருப்பதால், ஏர் இந்தியா விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இது கூடுதல் எரிபொருள் செலவை ஏற்படுத்தி நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
புதிய யுக்தி
டிக்கெட் விலையை குறைக்க புதிய யுக்தி
விமான எரிபொருள் விலை கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்த $99.40-லிருந்து, தற்போது பேரலுக்கு $179.46 ஆக அதிகரித்துள்ளது. இதனால் விமானங்களை இயக்குவதற்கான செயல்பாட்டு செலவைக் கூட எடுக்க முடியவில்லை என ஏர் இந்தியா அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். எரிபொருள் கட்டண உயர்வால் டிக்கெட் விலைகள் அதிகரித்து வருவதைத் தடுக்க, ஏர் இந்தியா தனது சேவைகளைத் தனித்தனியாகப் பிரித்து கட்டணத்தைக் குறைக்கும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. உள்நாட்டு மற்றும் குறுகிய தூர சர்வதேச விமானங்களில் இனி உணவு கட்டாயமில்லை. உணவைத் தவிர்க்கும் பயணிகளுக்கு டிக்கெட் விலையில் ₹250 வரை சேமிப்பு கிடைக்கும். பிசினஸ் கிளாஸ் பயணிகள் விமான நிலையங்களில் லவுஞ்ச் வசதியைத் தவிர்க்க விரும்பினால், அவர்களுக்கும் குறைந்த விலையில் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
நடவடிக்கை
மத்திய அரசின் ஏற்றுமதி வரி குறைப்பு
விமான நிறுவனங்களின் அழுத்தத்திற்கு மத்தியில், மே 1 முதல் அமலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் ஏவியேஷன் டர்பைன் ஃபியூவல் (ATF) மீதான விண்ட்ஃபால் ஏற்றுமதி வரிகளை மத்திய அரசு குறைத்துள்ளது. டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ₹55.5-லிருந்து ₹23 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருள் மீதான வரி, லிட்டருக்கு ₹42-லிருந்து ₹33 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIA) உள்நாட்டுச் சந்தையில் விமான எரிபொருளுக்கான கலால் வரியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், மாநில அளவிலான வாட் (VAT) வரியை குறைக்கவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு(MoCA) அவசரக் கடிதம் எழுதியுள்ளது.