800 மில்லியன் டாலர் கட்டணத்தை செலுத்துங்கள்; பங்களாதேஷுக்கு அதானி நிறுவனம் வலியுறுத்தல்
அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி பவர், பங்களாதேஷின் தற்போதைய நிலுவைத் தொகை 800 மில்லியன் டாலர்களை (சுமார் ₹6,714 கோடி) தாண்டிய போதிலும், அந்நாட்டிற்கு தடையில்லா மின்சாரம் வழங்க உறுதியளித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலுவைத் தொகையை விரைவாக செலுத்துமாறு பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தை நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. அதானி நிறுவனம் இந்தியாவில் தங்கள் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானத்துடன் தொடர்புடைய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அதிக அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதால் இந்தக் கோரிக்கை வந்துள்ளது. ஜார்க்கண்டில் உள்ள அதானி பவரின் 1,600 மெகாவாட் கோடா ஆலை பங்களாதேஷ் மின் மேம்பாட்டு வாரியத்துடன் (பிபிடிபி) பிரத்யேக விநியோக ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது. இதற்காக பிபிடிபி மாதந்தோறும் சராசரியாக $90 முதல் $100 மில்லியன் வரை கட்டணம் செலுத்துகிறது.
பங்களாதேஷிற்கு மின்சாரம் வழங்கும் கோடா மின் திட்டம்
நவம்பர் 2017இல், இரு தரப்பினருக்கும் இடையே 25 ஆண்டுகால மின் கொள்முதல் ஒப்பந்தம் (பிபிஏ) கையெழுத்தானது. அதானி தனது ஆலையில் இருந்து பங்களாதேஷின் உச்ச மின் தேவையில் சுமார் 10% வழங்குவதாக உறுதியளித்தது. இதற்கான கோடா மின் திட்டம், மொத்தம் $2 பில்லியன் செலவில், இந்தியாவின் முதல் இயக்கப்பட்ட நாடுகடந்த மின் திட்டமாகும். ஜூன் 2023 முதல், இந்த ஆலை பங்களாதேஷுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்கி வருகிறது. மின்சார விநியோகத்திற்கு அப்பால், அதானி குழுமம் பங்களாதேஷில் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அரிசி பேக்கேஜிங் ஆலைகளையும் நிர்வகிக்கிறது. இதற்கிடையே கடும் நிதிச் சிக்கலில் உள்ள பங்களாதேஷ், 4.7 பில்லியன் டாலர் திட்டத்திற்கு அப்பால் சர்வதேச நாணய நிதியத்திடம் கூடுதல் கடன்களை கோரியுள்ளது.