அக்செஞ்சர் நிறுவனத்தின் புதிய சம்பள உயர்வு முறை: 50% அடிப்படைச் சம்பளம், 50% ரொக்கப் பணம்
செய்தி முன்னோட்டம்
பிரபல பன்னாட்டு ஐடி நிறுவனமான அக்செஞ்சர், தனது ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு முறையில் ஒரு புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறையின் கீழ், ஊழியர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் சம்பள உயர்வில் 50 சதவீதம் மட்டுமே அவர்களின் அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படும். மீதமுள்ள 50 சதவீத உயர்வானது, ஜூன் மாதத்தில் ஒரே தவணையாக ஒருமுறை ரொக்கப் பணம் என்ற கணக்கில் தனியாக வழங்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
சம்பள உயர்வு
புதிய சம்பள உயர்வு முறை எவ்வாறு செயல்படும்?
இந்த புதிய முறையை ஒரு எளிய உதாரணம் மூலம் புரிந்துகொள்ளலாம். அக்செஞ்சர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு இந்த ஆண்டு 3 சதவீத சம்பள உயர்வு ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
புதிய விதியின்படி, அதில் 1.5 சதவீத உயர்வு மட்டுமே அவரது மாதாந்திர அடிப்படைச் சம்பளத்துடன் நிரந்தரமாகச் சேர்க்கப்படும்.
மீதமுள்ள 1.5 சதவீதத்திற்கு இணையான தொகையானது, ஜூன் மாதச் சம்பளத்துடன் ஒட்டுமொத்தமாக ஒரே முறை ரொக்கப் பணமாக ஊழியரின் கையில் வழங்கப்படும் என்று நிறுவனம் விளக்கியுள்ளது.
மாற்றத்திற்கான காரணம்
அதிக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவே இந்த மாற்றம்
நிறுவனத்தின் இந்த புதிய மாடல், ஊழியர்களுக்கு உடனடியாக அதிகப் பணப்புழக்கத்தைக் கொடுக்கும் அதே வேளையில், நிறுவனத்தால் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பள உயர்வை நீட்டிக்க வழிவகை செய்யும் என்று அக்செஞ்சரின் உள்நோட்டுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒரே பதவியில் நீடித்த ஊழியர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே சம்பள உயர்வு வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நிரந்தரச் சம்பளம் மற்றும் ஒருமுறை ரொக்கப் பணம் என இரண்டாகப் பிரிப்பதன் மூலம், தகுதியான அதிகப்படியான ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க முடிந்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
போனஸ் விதிகள்
பதவி உயர்வு மற்றும் போனஸ் விதிகளில் மாற்றமில்லை
இந்த புதிய 50-50 சம்பள உயர்வு முறையானது வழக்கமான ஆண்டுச் சம்பள உயர்வுக்கு மட்டுமே பொருந்தும் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஊழியர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்துடன் முழுமையாகவே சேர்க்கப்படும்.
மேலும், இந்த ஜூன் மாத ஒருமுறை ரொக்கப் பணம் வழங்கும் முறையானது, டிசம்பர் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் நிறுவனத்தின் வருடாந்திர போனஸ் சுழற்சியில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது, அது தனியாகத் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விமர்சனங்கள்
ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ள கலவையான விமர்சனங்கள்
அக்செஞ்சர் நிறுவனத்தின் இந்த திடீர் மாற்றத்திற்கு ஊழியர்கள் மத்தியில் ஆதரவும், பல கேள்விகளும் என கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த புதிய அப்ரோச் இந்த ஒரு வருடத்திற்கு மட்டும்தானா அல்லது இனி வரும் ஆண்டுகளிலும் தொடருமா என்ற கேள்வியை ஊழியர்கள் எழுப்பி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, ஜூன் மாதத்தில் ஒரே தொகையாகக் கையில் வழங்கப்படும் இந்த ஒருமுறை ரொக்கப் பணத்திற்கு எவ்வாறு வருமான வரி விதிக்கப்படும் என்பது குறித்தும், பிஎஃப் கணக்கீடுகள் எவ்வாறு மாறும் என்பது குறித்தும் ஊழியர்கள் தற்பொழுது தெளிவு தேடி வருகின்றனர்.