வாடிக்கையாளரின் புகார் காரணமாக டைஜீன் மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா
இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்து வரும் அபாட் இந்தியா (Abbott India) நிறுவனம், தங்களுடைய ஆண்டாசிடு டைஜீன் சிரப்பை மருந்தின் குறிப்பிட்ட பேட்ச் தயாரிப்புகளை மட்டும் திரும்பப் பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறது. குறிப்பிட்ட மருந்தின் சுவை மற்றும் வாசனை மாறுபட்டு மோசமாக இருப்பதாக வாடிக்கையாளர்களிடமிருந்து புகார் வந்ததையடுத்து இந்த முடிவை எடுத்திருக்கிறது மும்பைச் சேர்ந்த அபாட் இந்திய. 'வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து மேற்கூறிய வகையில் புகாரைப் பெற்றதையடுத்து, தங்களிடம் மேற்கூறிய மருந்தின் குறிப்பிட்ட பேட்ச்களை தன்னார்வ முறையில் திரும்பப் பெறவிருப்பதாக அபாட் இந்தியா தெரிவித்ததாக', மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அஜீரண மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா:
அபாட் இந்தியாவின் கோவா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மின்ட், ஆரஞ்சு மற்றும் பிற பழச் சுவைகளைக் கொண்ட டைஜீன் ஜெல் மருந்தின் அனைத்து பேட்ச்களையும் தன்னார்வ முறையில் திரும்பப் பெறவிருக்கிறது அந்நிறுவனம். வாடிக்கையாளர் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதை தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடமும் உறுதி செய்திருக்கிறது அபாட் இந்தியா. அபாட் இந்தியா திரும்பப் பெறும் இந்த டைஜீன் மருந்தை உட்கொண்டதனால் எந்த விதமான உடல்நலக் கோளாறுகளும் ஏற்பட்டதாக இதுவரை எந்தப் புகாரும் எழவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களது பிற தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் டைஜீன் மருந்துகளில் எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்றும், தொடர்ந்து உற்பத்தி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறது அபாட் இந்தியா.