மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? 8வது ஊதியக் குழுவின் அறிக்கை காலம் & நிலுவைத்தொகை விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக் குழுவின் கீழ் சம்பள உயர்வுக்காக மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும், நடப்பு நிலவரப்படி 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மட்டுமே ஊதிய உயர்வு குறித்த தெளிவான தகவல்களும், அதற்கான நிதிப் பலன்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. 8வது ஊதியக் குழுவின் பணிகளுக்கான காலக்கெடு மற்றும் அரசாங்கத்தின் ஒப்புதல் நடைமுறைகள் இதற்கு முக்கியக் காரணங்களாகும். கூடுதல் விபரங்கள் இங்கே:-
காலக்கெடு
8வது ஊதியக் குழுவின் பணிகள் மற்றும் அறிக்கை காலக்கெடு
நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 3 உறுப்பினர்கள் கொண்ட 8வது ஊதியக் குழு நவம்பர் 3, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது.
இதற்கான வரைமுறை விதிகளின்படி, 18 மாதங்களுக்குள் தனது கலந்தாய்வுகளை முடித்து அரசிடம் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இதன்படி மே-ஜூன் 2027-க்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பெங்களூரு, டெல்லி, புதுச்சேரி போன்ற இடங்களில் பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
நடைமுறைகள்
அறிக்கை சமர்ப்பித்த பிறகு நடக்கும் நடைமுறைகள் என்ன?
ஊதியக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட உடனேயே சம்பள உயர்வு உடனடியாக வழங்கப்பட மாட்டாது.
முதலாவதாக, 3 பேர் கொண்ட குழுவின் அறிக்கையை மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்கும்.
நிதியமைச்சகம் புதிய ஊதிய விகிதங்களின் நிதி சுமையைக் கணக்கிட்டு ஒப்புதல் அளிக்கும்.
அதன் பிறகே புதிய சம்பள உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
இந்த முழுமையான நடைமுறை முடிவடைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதில் இருந்து மேலும் சில மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை ஆகலாம்.
அரியர்ஸ்
நிலுவைத்தொகை மற்றும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் கோரிக்கைகள்
7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 31, 2025 உடன் முடிவடைந்தது.
எனவே, புதிய ஊதிய மாற்றம் 2027-இல் அமலுக்கு வந்தாலும், ஊழியர்களுக்கு ஜனவரி 1, 2026 முதல் கணக்கிடப்பட்டு நிலுவைத்தொகையாக வழங்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும், கடந்த முறை 2.57x ஆக இருந்த ஃபிட்மென்ட் ஃபேக்டரை இந்த முறை 3.833 மடங்கு (NCJCM கோரிக்கை) அல்லது 4 மடங்கு (BPMS கோரிக்கை) உயர்த்த வேண்டும் என ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த முடிவுகள் 2035-36 வரை நடைமுறையில் இருக்கும்.