மத்திய அரசு ஊழியர்களுக்குப் ஜாக்பாட்? 8வது ஊதியக் குழுவிடம் புதிய சம்பள உயர்வு, ஃபிட்மெண்ட் ஃபேக்டர் கோரிய ரயில்வே வாரியம்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழு (8th CPC) தற்பொழுது பல்வேறு அமைப்புகளுடன் தீவிரக் கலந்தாய்வை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், ரயில்வே துறையைச் சேர்ந்த முக்கிய ஊழியர் சங்கங்கள் தங்களின் புதிய சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் குறித்த விரிவான கோரிக்கைகளை ஊதியக்குழுவின் முன் வைத்துள்ளனர். தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, தங்களின் அடிப்படை ஊதியக் கட்டமைப்பு மற்றும் வருடாந்திர ஊதிய உயர்வுகளில் மிக முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் இக்கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
கோரிக்கை
குறைந்தபட்ச அடிப்படை ஊதிய உயர்வு கோரிக்கை
ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் ஊதியக்குழுவிடம் அளித்துள்ள பரிந்துரையில், தற்போதைய சந்தை நிலவரங்களின்படி ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை 52,600 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனப் பதிவிட்டுள்ளது. இதேபோல், ரயில்வே மூத்த குடிமக்கள் நலச் சங்கமும் தங்களின் கோரிக்கையில், தற்போதைய நுகர்வோர் தேவைகளான வீட்டுவசதி, கல்வி, மருத்துவம் மற்றும் டிஜிட்டல் இணைப்புச் செலவுகளைக் கணக்கில் கொண்டே புதிய ஊதியக் கணக்கீடுகள் அமைய வேண்டும் எனக் கூறியுள்ளது. பணவீக்கத்தின் தாக்கத்தை முழுமையாகச் சமன் செய்யும் வகையில் இந்த புதிய ஊதிய உயர்வு அமைய வேண்டும் என்பதே இவர்களின் பிரதான நோக்கமாகும்.
மாற்றங்கள்
ஃபிட்மெண்ட் ஃபேக்டர் மற்றும் ஊதிய மேட்ரிக்ஸ் மாற்றங்கள்
புதிய சம்பள உயர்வைத் தீர்மானிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஃபிட்மெண்ட் ஃபேக்டர் கணக்கீட்டில் முக்கிய மாற்றங்களை ஊழியர் அமைப்புகள் தற்பொழுது கோரியுள்ளன. அதன்படி, ஆரம்பநிலை ஊழியர்களுக்கு 2.92 என்ற அளவிலும், உயர்மட்டப் பொறுப்புகளில் உள்ள தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு 3.50 முதல் 3.80 வரை மாறுபட்ட ஃபிட்மெண்ட் ஃபேக்டர்களைப் பயன்படுத்த ரயில்வே மூத்த குடிமக்கள் நலச் சங்கம் பரிந்துரைத்துள்ளது. மேலும், ஜூனியர் இன்ஜினியர் மற்றும் செக்ஷன் இன்ஜினியர்களின் பணிப் பொறுப்புகள் மற்றும் அபாயங்களுக்கு ஏற்ப அவர்களின் ஊதிய நிலைகளை உயர்த்துவதுடன், அவர்களுக்கு குரூப்-பி அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு
வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள்
தற்போதைய 3 சதவீத வருடாந்திர ஊதிய உயர்வை 5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூடுதல் ஊதிய உயர்வுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான இந்த 8வது ஊதியக் குழு, ஜூன் 15 ஆம் தேதி வரை பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களைப் பெறவுள்ளது. இக்குழு தனது இறுதிப் பரிந்துரைகளை வரும் 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்களும் 65 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பலனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.