மே 2027 கெடு மாறுமா? 8வது ஊதியக் குழு அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும்? மத்திய அரசின் புதிய தகவல்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள மாற்றத்திற்கான 8வது ஊதியக் குழு கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று முறைப்படி அமைக்கப்பட்டது. இந்த ஊதியக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் 8வது ஊதியக் குழுவின் அதிகாரப்பூர்வ கெடு வரும் 2027 ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த மே 2027 காலக்கெடுவிற்கு முன்பாக இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், மத்திய அரசு இது குறித்துத் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.
விளக்கம்
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ விளக்கம்
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த நிதி அமைச்சகம், ஊதியக் குழு அமைக்கப்பட்ட நாளில் இருந்து 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை வழங்கிவிடும் எனத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட கெடுவுக்கு முன்பாகவே அறிக்கை தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து அரசு உறுதியான எவ்விதத் தகவலையும் அளிக்கவில்லை.
மேலும், ஊதியக் குழு எனது வழக்கமான நடவடிக்கைகளைச் சுதந்திரமாகத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டது என்றும், அதன் அன்றாட முன்னேற்றங்கள் குறித்த தகவல்களை மத்திய அரசிற்குத் தொடர்ந்து வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் நாடாளுமன்றப் பதிலில் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலை
தற்போதைய கலந்தாய்வு மற்றும் கருத்துக்கணிப்பு
தற்போது 8வது ஊதியக் குழு தனது முதற்கட்டக் கலந்தாய்வு மற்றும் மதிப்பீட்டுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், ஓய்வூதியதாரர் அமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு வருகிறது.
இதற்காக ஜெய்ப்பூர், சென்னை, புதுச்சேரி மற்றும் சண்டிகர் ஆகிய முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து நேரடிக் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்த ஊதியக் குழு திட்டமிட்டுள்ளது.
அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் சேகரித்த பிறகே புதிய சம்பள விகிதம் மற்றும் பிற மாற்றங்கள் குறித்த இறுதிப் பரிந்துரைகள் தயாரிக்கப்படும்.
பரிந்துரை
பரிந்துரைகளில் உள்ள முக்கிய அம்சங்கள்
இந்த 8வது ஊதியக் குழுவின் ஆய்வு வரம்பில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஊழியர்களின் அடிப்படை சம்பள மாற்றம், அகவிலைப்படி சீரமைப்பு, பிற படிகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணிச் சேவை நிபந்தனைகள் ஆகியவை இதில் விரிவாக ஆய்வு செய்யப்படுகின்றன.
இருப்பினும், இந்தப் பரிந்துரைகள் அமலுக்கு வரும் போது ஊழியர்களின் சம்பளம் அல்லது ஓய்வூதியத்தில் எவ்வளவு உயர்வு இருக்கும் என்பது குறித்து மத்திய அரசு இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அறிக்கை பெறப்பட்ட பிறகே இது குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும்.
ஊழியர்கள்
70 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்
8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் போது, நாடு முழுவதும் உள்ள சுமார் 70 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேரடியாகப் பலன் அடைவார்கள்.
2026 மார்ச் நிலவரப்படி சுமார் 35.77 லட்சம் சிவிலியன் ஊழியர்களும், 2025 டிசம்பர் நிலவரப்படி ராணுவப் பிரிவு அல்லாத 33.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதில் அடங்குவர்.
ஊதியக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்த பின்னரே மத்திய அரசு அதை ஆய்வு செய்து அமலாக்கத் தேதியை அறிவிக்கும் என்பதால், மே 2027 வரையிலான காலகட்டம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.