பட்ஜெட் 2025: கூடுதலாக 75,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் 2025ஐ சனிக்கிழமை (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அப்போது அடுத்த ஆண்டு இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 10,000 கூடுதல் இடங்கள் சேர்க்கப்படும், அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 இடங்கள் சேர்க்கப்படும் என்று தெரிவித்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும், ஐஐடிகள் அல்லது இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு சாதகமான செய்திகளை வெளியிட்டார்.
கடந்த தசாப்தத்தில் நாட்டில் உள்ள 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும், மேலும் 2014க்கு பிறகு தொடங்கப்பட்ட ஐந்து புதிய ஐஐடிகளில் மாணவர்களுக்கு கூடுதல் உள்கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் அறிவிப்பு
முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி மருத்துவத் துறையில் கூடுதல் இடங்கள் உருவாக்குவதுவது குறித்து தெரிவித்தார்.
அதில், இந்தியாவில் 2014 முதல் கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் இடங்களாக மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
ஆனாலும், இன்னும் சுமார் 25,000 மாணவர்கள் மருத்துவக் கல்விக்காக வெளிநாடு செல்வதாகக் கூறிய அவர், இதை மாற்ற கூடுதலாக 75,000 இடங்கள் உருவாக்கப்படும் என்றார்.
அப்போது பிரதமர் மோடி அறிவித்ததை, தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.