இந்தியாவில் லேப்டாப்களை தயாரிக்க ஆர்வம் காட்டும் 38 நிறுவனங்கள்
ரூ.17,000 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப வன்பொருட்கள் தயாரிப்பிற்கான PLI 2.0 (Production Linked Incentives) திட்டத்தினை கடந்த மே மாதம் அறிவித்தது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம். இத்திட்டத்தின் கீழ், இந்தியாவில் லேப்டாப், டேப்லட் மற்றும் சர்வர்கள் உள்ளிட்ட கணினி மற்றும் கணினி சார்ந்த மின்னணு சாதனங்களை உள்நாட்டில் தயாரிப்பவர்களுக்கு மானியம் வழங்கத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு நேற்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 25 இந்திய நிறுவனங்கள் உட்பட 38 நிறுவனங்கள் PLI 2.0 திட்டத்திற்கு விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ். ஆனால், ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேப்டாப் தயாரிப்புக் கட்டமைப்பை மேம்படுத்த புதிய முயற்சி:
இந்தியாவிற்கு தேவையான லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் 70%-த்தை சீனா, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது இந்தியா. எனவே, ஸ்மார்ட்போன் தயாரிப்பைப் போலவே, லேப்டாப் உள்ளிட்ட இதர மின்சாதனங்களின் தயாரிப்புக் கட்டமைப்பையும் இந்தியாவில் மேம்படுத்துவே தகவல் தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்பிற்கான PLI 2.0 திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு. மேலும், முன்னர் மின்சாதனங்களின் இறக்குமதிக்கு எவ்வித தடையும் விதிக்கப்படாமல் இருந்ததனாலும், குறைந்த அளவிலான மானியம் வழங்கப்பட்டு வந்ததாலும், மின்சாதனத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிப்பை மேற்கொள்ள முன்வரவில்லை. தற்போது, நவம்பர் மாதம் முதல் மின்சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்து, கூடுதல் மானியம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மின்சாதனத் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் தயாரிப்பை மேற்கொள்ள ஆர்வம் காட்டியிருக்கின்றனர்.