இந்தியாவில் விரைவில் வெளியாகிறது யமஹாவின் R3 மற்றும் MT-03
யமஹா நிறுவனமானது இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்களுடைய டீலர்கள் சந்திப்பில், டீலர்களுக்கு மட்டும் புதிய R3 மற்றும் MT-03 ஆகிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த பைக்குகள் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்களை யமஹா நிறுவனம் அப்போது தெரிவிக்கவில்லை. தற்போது, மேற்கூறிய புதிய பைக்குகள் எப்போது வெளியாகலாம் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. R3 மற்றும் MT-03 ஆகிய இரண்டு பைக்குகளையும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது யமஹா. அதாவது, டிசம்பர் 2023 முதல் மார்ச் 2024-க்குள், மேற்கூறிய இரண்டு பைக்குகளையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது யமஹா. இரண்டு பைக்குகளையும் ஒரே நேரத்தில் வெளியிடாமல் குறிப்பிட்ட இடைவெளியில் அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யமஹா R3 & MT-03:
இந்த இரண்டு பைக்குகளையும் இந்தோனேஷியாவில் இருந்து CBU (Completely Built Unit) முறையில் இறக்குமதி செய்து விற்பனை செய்யவிருக்கிறது யமஹா. ஆனால், அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக CKD (Completely Knocked Down) முறைக்கு மாற்றவும் திட்டமிட்டிருக்கிறுத அந்நிறுவனம். முன்னர் R3-யின் BS4 வெர்ஷனை இந்தியாவில் விற்பனை செய்து வந்தது யமஹா. புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலான பின்பே அந்த பைக்கின் விற்பனையை யமஹா நிறுத்தியது. R3-யின் விற்பனையை நிறுத்திய போது ரூ.3.5 லட்சம் விலையில் விற்பனையாகி வந்தது அந்த மாடல். தற்போது பல்வேறு அப்டேட்களை R3-யில் யமஹா நிறுவனம் செய்திருக்கும் நிலையில், பைக்கின் விலை இன்னும் கூடுதலாக ரூ.4 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.