மெட்ராஸ் டே 2023: இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகராக விளங்கும் சென்னை!
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் உள்ள உலகின் ஆட்டோமொபைல் தலைநகர் என அழைக்கப்படும் டெட்ராய்டைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆனால், இந்தியாவில் உள்ள 'தெற்காசியாவின் டெட்ராய்ட்' என அழைக்கப்படும் நகரைப் பற்றித் தெரியுமா?
அது வேறு எந்த நகரமும் இல்லை, இன்று 384வது பிறந்தநாளைக் கொண்டாடும் நம்ம சென்னை தான் அது. ஆனால், ஏன் சென்னையை தெற்காசியாவின் டெட்ராய்ட் என அழைக்கிறார்கள்?
அதற்கு சென்னையில் தங்களது தொழிற்சாலைகளை நிறுவியிருக்கும் மற்றும் புதிய சென்னையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளவிருக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களே காரணம்.
இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவில் தொடங்கி, வெளிநாட்டு லக்சரி கார் தயாரிப்பு நிறுவனங்களான பிஎம்டபிள்யூ வரை பல நிறுவனங்கள் சென்னையில் தங்களுடைய வாகனத் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவியிருக்கின்றன.
சென்னை
இந்தியா ஆட்டோமொபைல் தயாரிப்புத் துறையில் பெரும்பங்கு வகிக்கும் சென்னை:
இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில் 30% சென்னையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. வாகனத் தயாரிப்புக்குத் தேவையான பாகங்களில் 35% சென்னையிலேயே உற்பத்தியாகின்றன.
இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களில் 60% சென்னையில் உற்பத்தி செய்யப்படுபவையே. இது மட்டுமின்றி, இந்திய ரயில்வே துறையானது, தங்களுக்குத் தேவையான ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் இன்டகிரல் கோச் தொழிற்சாலையை சென்னையிலேயே அமைத்திருக்கிறது.
வணிக தேவைகளுக்கான வாகனங்களைக் கடந்து, ராணுவத்திற்கான வாகங்களைத் தயாரிக்கும் கனரக வாகனத் தொழிற்சாலையும், ராணுவ வாகனங்களுக்கான புதிய இன்ஜினை சோதனை செய்யும் மற்றும் உருவாக்கும் CVRDE நிறுவனமும் சென்னையிலேயே இயங்கி வருகிறது.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள், குறிப்பாக சென்னையில் தங்களது முதலீடுகளை மேற்கொள்வதற்கு, சென்னையின் துறைமுகமும், தொழிலாளர் வளமும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.