ஒரே சார்ஜில் 800 கிமீ; டெஸ்லாவுக்கு சவால் விடும் வோல்வோ EX60; எலக்ட்ரிக் கார் உலகில் புதிய புரட்சி
செய்தி முன்னோட்டம்
பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான வோல்வோ, தனது அடுத்த தலைமுறை எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான EX60 ஐ வரும் ஜனவரி 21, 2026 அன்று உலகளவில் அறிமுகப்படுத்த உள்ளது. தற்போதைய வோல்வோ XC60 மாடலுக்கு மாற்றாக, முழுமையான மின்சார ஆற்றலில் இயங்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் கார் சந்தையில் வோல்வோவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்த மாடல் மிக முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் மிக முக்கியமான சிறப்பம்சமே இதன் பேட்டரி திறன் தான். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 800 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லும் திறன் கொண்டது என நிறுவனம் உறுதியளித்துள்ளது. இது முன்னணி எலக்ட்ரிக் கார்களுக்கு கடும் போட்டியாக அமையும்.
தொழில்நுட்பம்
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு
வோல்வோவின் புதிய SPA3 பிளாட்பார்மில் உருவாக்கப்படும் முதல் கார் இது என்பதால், இதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உச்சகட்ட தரத்தில் இருக்கும். வோல்வோ EX60 காரில் மெகா காஸ்டிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது காரின் எடையைக் குறைப்பதோடு, உற்பத்தியைச் சுலபமாக்கவும் உதவுகிறது. மேலும், உட்புறத்தில் அதிநவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேம்படுத்தப்பட்ட லேசர் சென்சார்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு வசதிகள் இடம் பெற்றுள்ளன. சொகுசு மற்றும் தொழில்நுட்பத்தின் சங்கமமாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
சந்தை எதிர்பார்ப்பு
வோல்வோ நிறுவனம் 2030 ஆம் ஆண்டிற்குள் முழுமையான எலக்ட்ரிக் கார் நிறுவனமாக மாற இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்தப் பயணத்தில் EX60 ஒரு மைல்கல்லாக அமையும். ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் முதலில் அறிமுகமாகும் இந்த கார், அதன்பிறகு இந்திய சந்தையிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை மற்றும் கூடுதல் தொழில்நுட்ப விவரங்கள் ஜனவரி 21 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.