ஹோண்டாவின் இந்திய லைன்-அப்பில் இருக்கும் இருசக்கர வாகனங்கள் என்னென்ன?
ஹீரோவின் கம்யூட்டர் பைக்குகளுக்குப் போட்டியாக 100சிசி ஷைனை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது ஹோண்டா. அந்த வெளியீட்டின் போதே பல்வேறு புதிய பைக்குகளுக்கான திட்டமும் இருப்பதா அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. ஹோண்டாவின் லைன்-அப்பில் அடுத்த இந்தியாவில் வெளியாகவிருக்கும் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம். 350சிசி க்ரூஸர்: ராயல் என்ஃபீல்டின் கிளாஸிக் மற்றும் ஹண்டருக்குப் போட்டியாக ஹைனஸ் மற்றும் CB350RS ஆகிய பைக்குகளை விற்பனை செய்து வருகிறது ஹோண்டா. ஆனால், மீட்டியார் 350-க்கு இணையான பைக் மாடல் ஹோண்டாவிடம் இல்லை. இந்த வருட தீபாவளிக்குள் புதிய 350சிசி பைக் ஒன்றை வெளியிடவிருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது அந்நிறுவனம். எனவே, மீட்டியாருக்கு போட்டியாக ஹைனஸ் மற்றும் CB350-யில் பயன்படுத்தப்பட்ட இன்ஜின்களுடனேயே க்ரூஸர் ஒன்றை ஹோண்டா வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்:
நடப்பு நிதியாண்டிற்குள் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் அந்நிறுவனம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. நிலையான பேட்டரிக்களுடன் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும், மாற்றிக் கொள்ளும் பேட்டரி வசதியுடன் கூடிய ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் உருவாக்கி வருகிறது ஹோண்டா. இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்று ஆக்டிவாவை அடிப்படையாகக் கொண்ட எலெக்ட்ரிக் ஆக்டிவா ஸ்கூட்டராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 125சிசி ஸ்கூட்டர் மற்றும் 160சிசி பைக்: பெட்ரோல் மாடல்களில் ஆக்டிவானின் இன்ஜினுடன் டிவிஎஸ் என்டார்க் மற்றும் சுஸூகி அவெனிஸூக்குப் போட்டியாக ஸ்போர்ட்டியான 125சிசி ஸ்கூட்டர் ஒன்றை அந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. எக்ஸ்-பிளேடு மற்றும் யூனிகார்ன் பைக்குகளில் பயன்படுத்தப்பட்ட இன்ஜினுடன் புதிய 160சிசி பைக் ஒன்றையும் உருவாக்கி வருகிறது ஹோண்டா. இதுவொரு அட்வென்சர் பைக்காக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.