அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையில் நுழையும் 'லோட்டஸ்'
வரும் நவம்பர் 9ம் தேதியன்று புதிய சொகுசு காரின் அறிமுகத்துடன் அதிகாரப்பூர்வமாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நுழையவிருக்கிறது பிரிட்டனைச் சேர்ந்த சூப்பர்கார் தயாரிப்பு நிறுவனமான லோட்டஸ் (Lotus). கீலி ஆட்டோமோட்டிவ் என்ற சீன ஆட்டோமொபைல் நிறுவனத்தை தாய் நிறுவனமாகக் கொண்டிருக்கும லோட்டஸ் நிறுவனத்தின் இந்திய விற்பனை மற்றும் சேவையை, டெல்லியைச் சேர்ந்த எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸ் நிறுவனமே கவனித்துக் கொள்ளவிருக்கிறது. உலகளவில் எமேயா, எலெக்ட்ரா, எமைரா மற்றும் எவிஜா ஆகிய நான்கு மாடல் கார்களை சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது லோட்டஸ். இவற்றில் எமைரா மாடலையே அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோட்டஸ் எமைரா:
2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட லோட்டஸ் நிறுவனத்தின் கடைசி பெட்ரோல் இன்ஜின் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் இந்த எமைரா. அதன் பிறகு முழுவதுமாக எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே அறிமுகப்படுத்தி வருகிறது அந்நிறுவனம். மெர்சிடீஸ் மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் இரு பெட்ரோல் இன்ஜின்களை இந்த எமைரா மாடலில் பயன்படுத்தியிருக்கிறது லோட்டஸ். 4-சிலிண்டர்கள் கொண்ட, 2.0-லிட்டர் மெர்சிடீஸ் இன்ஜின் மற்றும் 3.5-லிட்டர் V6 டொயோட்டா இன்ஜின் ஆகிய இரண்டு இன்ஜின்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது எமைரா. இந்த காரை CBU (Completely Built Unit) முறையில் இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு இன்ஜின்களில் எந்த இன்ஜின் கொண்ட மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.