
நார்டான் பிராண்டிங்கின் கீழ் புதிய பைக் பெயரை பதிவு செய்திருக்கும் டிவிஎஸ்
செய்தி முன்னோட்டம்
பிரிட்டனைச் சேர்ந்த முன்னணி ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான நார்டான் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தைக் கடந்த 2020-ம் ஆண்டு கையகப்படுத்தியது டிவிஎஸ் நிறுவனம்.
தற்போது அந்நிறுவனத்தின் கீழ் நார்டான் காம்பேட் என்ற புதிய பைக் பெயர் ஒன்றை இந்தியாவில் டிரேட்மார்க் செய்திருக்கிறது டிவிஎஸ்.
இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஹார்லி டேவிட்சன் மற்றும் ட்ரையம்ப் பைக்குகளுடன் ஹாட் செக்மெண்டாக இருக்கிறது, எண்ட்ரி-லெவல் க்ரூசர் செக்மண்ட். அந்த செக்மண்டிலேயே புதிய பைக் ஒன்றை நார்டான் பிராண்டிங்கின் கீழ் டிவிஎஸ் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
500சிசி-க்குள்ளான பைக்குகள் தற்போது அதிகளவில் வெளியிடப்பட்டு வெற்றி கண்டு வரும் நிலையில், டிவிஎஸ் நிறுவனமும் அந்த வெற்றியில் ஒரு பங்கை எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டு வருகிறது.
டிவிஎஸ்
ராயல் என்ஃபீல்டுக்கு அதிகரிக்கும் போட்டி:
ஏற்கனவே, ஹார்லி டேவிட்சனுடன் இணைந்து ஹீரோவும், ட்ரையம்ப்புடன் இணைந்து பஜாஜும் ராயல் என்ஃபீல்டுக்கு கடுமையான போட்டியை உருவாக்கி வரும் நிலையில், நார்டான் பிராண்டிங்கின் கீழ் புதிய பைக்கை வெளியிட்டு டிவிஎஸ் நிறுவனமும் போட்டியை அதிகப்படுத்தவிருக்கிறது.
500சிசி-க்குள்ளான செக்மண்டில் மட்டுமல்லாது, புதிய 650சிசி ட்வின் சிலிண்டர் இன்ஜின் கொண்ட பைக் ஒன்றையும் ராயல் என்ஃபீல்டின் 650சிசி லைன்-அப்புக்குப் போட்டியாகக் களமிறக்கும் திட்டத்தைக் கொண்டிருக்கிறது டிவிஎஸ்.
தற்போது அந்நிறுவனம் பதிவு செய்திருக்கும் பெயரானது 500சிசி பைக்கா அல்லது ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியான 650சிசி மாடலா என்பது போக போகத் தான் தெரிய வரும்.
500சிசி-க்குள்ளான பைக்கை வெளியிடும் பட்சத்தில் ஹார்லி மற்றும் ட்ரையம்ப்பைப் போல குறைந்த விலையிலேயே டிவிஎஸ்ஸூம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.