
புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 28 இல் அறிமுகம் செய்கிறது டிவிஎஸ் நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 28, 2025 அன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு டிவிஎஸ் ஆர்பிட்டர் எனப் பெயரிடப்பட வாய்ப்புள்ளது. இந்த பெயர் ஏற்கனவே நிறுவனம் வர்த்தக முத்திரை பதிவு செய்திருந்த நிலையில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது டிவிஎஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் ஐக்யூப் மாடலுக்கு கீழே, மிகவும் மலிவு விலையில் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, டிவிஎஸ் ஐக்யூப் மாடலை ரூ.1 லட்சம் முதல் ரூ.1.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்து வருகிறது. ஆனால், புதிய மாடல் குறைந்த விலையில் வரும் என்பதால், இது பரந்த அளவிலான நுகர்வோரை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி
ஓலா மற்றும் பஜாஜிற்கு போட்டி
இது ஓலா எஸ்1எக்ஸ், விடா விஎக்ஸ்2 மற்றும் பஜாஜ் சேட்டக்கின் குறைந்த விலை மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்கூட்டரின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், இது ஒரு நேர்த்தியான மற்றும் நவீன தோற்றத்துடன் இருக்கலாம். மேலும், விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக, அம்சங்கள் குறைவாகவும், பேட்டரி அளவு சிறியதாகவும் இருக்கலாம். தற்போதுள்ள ஐக்யூப் மாடலில், 2.2 kWh முதல் 5.3 kWh வரையிலான பல்வேறு பேட்டரி விருப்பங்கள் உள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 212 கி.மீ வரை செல்லும். ஆனால், புதிய ஸ்கூட்டரில் சிறிய பேட்டரி பேக் பொருத்தப்படலாம். எனினும், ஐக்யூப் மாடலில் உள்ள சில அம்சங்கள் புதிய மாடலிலும் தொடர வாய்ப்புள்ளது.