
2024-25 நிதியாண்டில் விற்பனை, வருவாய் மற்றும் லாபத்தில் புதிய சாதனை படைத்த டிவிஎஸ் நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2024-25 நிதியாண்டில் விற்பனை, வருவாய் மற்றும் லாபத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.
நிறுவனம் 2024-25 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வருவாயைப் பதிவு செய்து, ரூ.36,251 கோடியை எட்டியுள்ளது.
இது 2023-24 இல் பதிவு செய்யப்பட்ட ரூ.31,776 கோடியுடன் ஒப்பிடும்போது 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் செயல்பாட்டு ஈபிஐடிடிஏ வரம்பு 120 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, ஆண்டுக்கு 12.3 சதவீதத்தை எட்டியுள்ளது.
வரிக்கு முந்தைய லாபம் 31 சதவீதம் உயர்ந்து, மார்ச் 2025 இல் முடிவடைந்த ஆண்டில் ரூ.2,781 கோடியிலிருந்து ரூ. 3,629 கோடியாக உயர்ந்துள்ளது.
வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.2,711 கோடியாக உயர்ந்துள்ளது. இது மார்ச் 2024 இல் முடிவடைந்த ஆண்டிற்கு ரூ.2,083 கோடியாகும்.
விற்பனை செயல்திறன்
2024-25 நிதியாண்டின் விற்பனை செயல்திறன் சிறப்பம்சங்கள்
2024-25 நிதியாண்டில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனை 13 சதவீதம் அதிகரித்து, 47.44 லட்சத்தை எட்டியது.
இது முந்தைய நிதியாண்டில் 41.91 லட்சம் யூனிட்களாக இருந்தது. இதில் மோட்டார் சைக்கிள் விற்பனை 10 சதவீதம் அதிகரித்து, 21.95 லட்சத்தை எட்டியது.
ஸ்கூட்டர் விற்பனை 21 சதவீதம் அதிகரித்து, 19.04 லட்சத்தை பதிவு செய்தது. மின்சார வாகன விற்பனை 44 சதவீதம் உயர்ந்து 2.79 லட்சமாக உயர்ந்துள்ளது.
டிவிஎஸ் இப்போது மொத்தம் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மூன்று சக்கர வாகன விற்பனை 1.35 லட்சமாக இருந்தது.