மாருதியின் எர்டிகாவை 'ரூமியான்' என்ற பெயரில் வெளியிடவிருக்கும் டொயோட்டா
செய்தி முன்னோட்டம்
டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸை, ரீபேட்ஜ் செய்து இன்விக்டோவாக மாருதி சுஸூகி கடந்த வாரம் அறிமுகம் செய்தது. தற்போது மாருதியின் எர்டிகா எம்பிவியை, ரூமியான் வடிவில் இந்தியாவில் ரீபேட்ஜ் செய்து டொயோட்டா வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே, மாருதியின் எர்டிகாவில் கிரில், அலாய் வீல்கள் மற்றும் பேட்ஜில் மட்டும் மாற்றம் செய்து ரூமியான் என்ற பெயரில் தென்னாப்பிரிக்காவில் 2021 முதலே விற்பனை செய்து வருகிறது டொயோட்டா. தற்போது அந்த மாடலை இந்தியாவிலும் அறிமுகம் செய்யவிருக்கிறது.
மாருதிக்காக இன்விக்டோவை டொயோட்டா தங்களுடைய பிடாடி தொழிற்சாலையில் தயாரிக்கும் நிலையில், டொயோட்டாவிற்காக இந்த புதிய ரூமியானை தங்களுடைய தொழிற்சாலையில் உற்பத்தி செய்து கொடுக்கவிருக்கிறது மாருதி.
டொயோட்டா
டொயோட்டா ரூமியான்: என்ன எதிர்பார்க்கலாம்?
மேற்கூறியபடி எர்டிகாவில் சின்னச் சின்ன மாற்றங்களை மட்டும் மேற்கொண்டு ரூமியானாக இந்தியாவில் வெளியிடவிருக்கிறது டொயோட்டா.
தென்னாப்பிரிக்காவில் விற்பனை செய்யும் ரூமியானில், எர்டிகாவில் உள்ள பெய்ஜ் நிற இன்டீரியருக்குப் பதிலாக கருப்பு நிற இன்டீரியரை டொயோட்டா வழங்கியிருக்கும். ஆனால், இந்தியாவில் அந்த மாற்றமும் இன்றி பெய்ஜ் நிற இன்டீரியருடனே ரூமியான் தயாரிக்கப்படவிருக்கிறது.
இன்ஜினிலும் எந்த மாற்றமும் இன்றி அதே 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கண்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜினே பயன்படுத்தப்படவிருக்கிறது.
மேலும், விலை கூட எர்டிகாவின் விலையிலேயே ரூமியானும் வெளியாகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 8-சீட்டர்களுடன் தயாரிக்கவிருக்கும் புதிய ரூமியானை வரும் செப்டம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டொயோட்டா.