ரூ.15 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் எலெக்ட்ரிக் கார்கள்
இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அனைத்து நகரங்களிலும் எலெக்ட்ரிக் வாகன கட்டமைப்பு மேம்பட்டு வரும் நிலையில், எலெக்ட்ரிக் கார்கள் மீதும் வாடிக்கையாளர்கள் தங்கள் பார்வையை திருப்பியிருக்கிறார்கள். இந்தியா மக்களிடம் எலெக்ட்ரிக் காரின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், எலெக்ட்ரிக் கார் விற்பனையை அதிகரிக்கவும் இந்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்த சமயத்தில் எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்க நீங்கள் முடிவெடுத்திருந்தால், உங்களுக்கான தொகுப்பு தான் இது. ரூ.15 லட்சத்திற்குள் இந்தியாவில் விற்பனையாகி வரும் டாப் எலெக்ட்ரிக் கார்கள் இவை தான்.
டாடா டியாகோ EV:
இந்தியாவில் ரூ.8.69 லட்சம் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது டாடா டியாகோ EV. இந்த எலெக்ட்ரிக் காரானது 19.2kWh மற்றும் 24kWh என இரண்டு விதமான பேட்டரி தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 19.24kWh பேட்டரி வேரியன்டானது 60hp பவர் மற்றும் 110Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரையும், 250 கிமீ ரேஞ்சையும் கொண்டிருக்கிறது. 24kWh பேட்டரி கொண்ட வேரியன்டானது 73hp பவர் மற்றும் 114Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரையும், 315 கிமீ ரேஞ்சையும் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, க்ரூஸ் கண்ட்ரோல், ABS-டன் கூடிய EBD உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த டியாகோ EV-யில் அளிக்கப்பட்டிருக்கின்றன.
சிட்ரன் eC3:
லைன் மற்றும் ஃபீல் என இரண்டு வேரியன்ட்களாக ரூ.11.50 லட்சம் எக்ஸ்-ஷோரூம் என்ற தொடக்க விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது சிட்ரன் eC3. 56hp பவர் மற்றும் 143Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரைப் பெற்றிருக்கும் இந்த எலெக்ட்ரிக் eC3 மாடலானது, 29.2kWh பேட்டரியுடன் 320 கிமீ ரேஞ்சையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 10.2 இன்ச் டச்ஸ்கிரீன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, இரண்டு ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் நான்கு ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் ஆகிய வசதிகள் இந்த சிட்ரன் eC3 மாடலில் வழங்கப்பட்டிருக்கின்றன.
எம்ஜி காமெட் EV:
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களுள் ஒன்று எம்ஜி காமெட் EV. ரூ.7.98 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி ரூ.9.98 லட்சம் எக்ஸ்-ஷோரூம் வரையிலான விலைகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது எம்ஜி காமெட். 41hp பவர் மற்றும் 110Nm டார்க்கை வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொண்டிருக்கும் எம்ஜி காமெட் EV-யானது, 17.3kWh பேட்டரியுடன் 230 கிமீ ரேஞ்சைக் கொண்டிருக்கிறது. 10.25 இன்ச் டச்ஸ்கிரீன், 7.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் OTA அப்டேட்ஸ் உள்ளிட்ட வசதிகள் இந்த காமெட் EV-யில் அளிக்கப்பட்டிருக்கின்றன.
டாடா நெக்ஸான்.ev:
இந்தியாவில் மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் கார் என்றால் இது நெக்ஸான்.ev தான். ரூ.14.74 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது டாடாவின் நெக்ஸான்.ev. மீடியம் ரேஞ்சு மற்றும் லாங் ரேஞ்சு என இரண்டு வெர்ஷன்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது நெக்ஸான்.ev. மீடியம் ரேஞ்சானது 30.2kWh என்ற சிறிய பேட்டரி அளவுடன், 127hp பவர் மற்றும் 215Nm டார்க்கை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொண்டிருக்கிறது. லாங் ரேஞ்சு வெர்ஷனானது 40.5kWh என்ற பெரிய பேட்டரி அளவுடன், 141hp பவர் மற்றும் 215Nm டார்க்கை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.